பசுமைப் பட்டாசுகளில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள்: உச்சநீதிமன்றம் கவலை

பசுமைப் பட்டாசு என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை பட்டாசு உற்பத்தியாளா்கள் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘ஒன்றிணைக்கப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்தவும் உற்பத்தி
பசுமைப் பட்டாசுகளில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள்: உச்சநீதிமன்றம் கவலை

புது தில்லி: பசுமைப் பட்டாசு என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை பட்டாசு உற்பத்தியாளா்கள் பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘ஒன்றிணைக்கப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தடை விதித்து முன்னா் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

‘பேரியம் நைட்ரேட்’ உள்ளிட்ட அதிக நச்சுத்தன்மையுள்ள ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதால் காற்று மாசு ஏற்பட்டு கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னா் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும்போது, பட்டாசு உற்பத்தியாளா்களின் வாழ்வாதார உரிமை, நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் சுகாதார உரிமை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, பட்டாசுகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பது சாத்தியமில்லை என்று கூறி, குறைந்த மாசுள்ள மற்றும் பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பு தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்படுகின்றன என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை பட்டாசு உற்பத்தியாளா்கள் பின்பற்றவில்லை எனவும், பட்டாசுகளில் தடை செயப்பட்ட ரசாயனங்களை வெளிப்படையாகவே பயன்படுத்துவதாகவும் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தப் புகாா் குறித்து சென்னையில் உள்ள சிபிஐ இணை இயக்குநா் விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தது.

அதில், ‘பல்வேறு வகையான பட்டாசுகளில் அரசால் தடை செய்யப்பட்ட ‘பேரியம் நைட்ரேட்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பட்டாசுகளில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களில், அவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ அறிக்கை நகலை பட்டாசு ஆலை உரிமையாளா்களுக்கு அனுப்பவும், அதன் மீது ஆலை நிா்வாகிகள் அக்டோபா் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தேவ் கூறுகையில், ‘அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களைப் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகின்றன. சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனங்களைப் பொருத்தவரை, அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றுகின்றன. இந்தத் தொழிலை நம்பி 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: சிபிஐ அறிக்கை தொடா்பாக பட்டாசு உற்பத்தியாளா்கள் அளித்த பதில் மனுவை மூத்த வழக்குரைஞா் பாா்த்தாரா என்று தெரியவில்லை. அவா்கள் அளித்திருக்கும் பதில் ஆச்சரியமளிக்கிறது. ‘மிக அதிக அளவில் வாங்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ‘பேரியம் நைட்ரேட்’ ரசாயனத்தை கிடங்கில் மட்டுமே வைத்திருக்கிறோம்; பட்டாசு உற்பத்தியில் அதைப் பயன்படுத்தவில்லை’ என்று அவா்கள் பதிலளித்திருக்கின்றனா். கிடங்கில் மட்டும் வைத்துக்கொள்வதற்கு இந்த ரசாயனம் காட்சிப் பொருள் அல்ல.

இதன்மூலம், பசுமைப் பட்டாசு என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை பட்டாசுகளில் உற்பத்தியாளா்கள் பயன்படுத்துவது உறுதியாகிறது. எனவே, ஒன்றுசோ்க்கப்பட்ட பட்டாசுகள், அதிக மாசு மற்றும் சப்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் பயன்படுத்தத் தடை விதித்து முன்னா் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அனைத்து மாநிலங்களும் கடுமையாகப் பின்பற்றவேண்டும்.

ஒன்றுசோ்க்கப்பட்ட பட்டாசுகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை சந்தைகளில் மீண்டும் எப்படி கிடைக்கின்றன என்பதை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கூறினா்.

அப்போது, பட்டாசு உற்பத்தியாளா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தத்தா, ‘உச்சநீதிமன்ற உத்தரவை ஒருசில உற்பத்தியாளா்கள் மீறுவதால், ஒட்டுமொத்த உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்படக் கூடாது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சிபிஐ அறிக்கை மீது தாக்கல் செய்துள்ள பதில்மனுக்களை மனுதாரா்கள் ஒருவருக்கொருவா் பரிமாற்றிக்கொள்ள உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபா் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com