சீன ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்; அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்தது என்ன?

கடந்தாண்டு லடாக் மோதலை தொடர்ந்து, 3,500 கிமீ தொலைவான இருநாட்டு எல்லை பகுதியை இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்துவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த வாரம், அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவியபோது, இந்திய பாதுகாப்பு படையினர் அதனை முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம், உத்தரகண்ட் மாநிலத்தில் சீன பாதுகாப்பு படையினர் ஊடுருவியதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த ஒருவர் கூறுகையில், "எல்லைப்பகுதி குறித்து இரு நாடுகளுக்கும் இருவேறு விதமான கருத்து நிலவிவருகிறது. தாங்கள் எல்லைகளாக கருதும் பகுதியில் இரு தரப்பும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன. சில மணி நேரத்திற்கு, இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதல் போக்கை கடைபிடித்தனர். பின்னர், இரு தரப்பும் படைகளை திரும்பபெற்றனர்.

இந்திய ராணுவத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில், பல முறை சீன ராணுவம் இப்பகுதியில் ஊடுருவல் மேற்கொண்டுள்ளது" என்றார்.

ஆகஸ்ட் 30 அன்று, நந்தா தேவி உயிர்க்கோளக் காப்பகத்தின் வடக்கே உள்ள பராஹோத்தி பகுதியில் சுமார் 100 சீன வீரர்கள் 5 கிமீ தூரத்தை தாண்டி ஊடுருவினர். இந்திய - திபெத்திய எல்லைக் காவல் படையினர் அங்கு பாதுகாப்பில் இருந்துவருகின்றனர். சில மணி நேரத்திற்கு பிறகு, சீன ராணுவம் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளது.

பராஹோத்தி பகுதியில், எல்லைப்பகுதி குறித்து இந்திய, சீன ராணுவத்திற்கிடையே மாற்று கருத்து நிலவிவருகிறது. இதன் காரணமாகவே, இரு நாடுகளுக்கிடையே சிறு சிறு மோதல் நிலவிவருகிறது. இருப்பினும், ஆகஸ்ட் 30ஆம் தேதி, சீன ராணுவ வீரர்கள் 100 பேர் அங்கு ஊடுருவல் மேற்கொண்டது இந்திய பாதுகாப்பு படையினரை ஆச்சரியப்படுத்தியது.

இதற்கு மத்தியில், அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை சீன ராணுவம் மேம்படுத்திவருகிறது. கடந்தாண்டு லடாக் மோதலை தொடர்ந்து, 3,500 கிமீ தொலைவான இருநாட்டு எல்லை பகுதியை இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com