இந்தியாவிற்கு வருகிறதா டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை? மகிழ்ச்சியான செய்தி சொன்ன நிதின் கட்கரி

"டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் மின்சார வாகனங்கள் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களுடன் எந்த விதத்திலும் குறைவானது அல்ல" என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிக்கும்படி அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்திடம் பல முறை கேட்டு கொண்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே கான்க்ளேவ் 2021 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி இதுகுறித்து மேலும் கூறுகையில், "இந்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் டெஸ்லா நிறுவனத்திற்கு அளிக்கும். டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் மின்சார வாகனங்கள் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களுடன் எந்த விதத்திலும் குறைவானது அல்ல.

டெஸ்லா நிறுவனம் சீனாவில் தயாரித்த மின்சார கார்களை இந்தியாவில் விற்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறினேன். நீங்கள் இந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய வேண்டும், மேலும் இந்தியாவிலிருந்து கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்" என்றார்.

மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த பேசிய அவர், "நீங்கள் கேட்கும் அனைத்து ஆதரவையும் அரசு வழங்கும். விதிவிலக்கு குறித்த அவர்களின் கோரிக்கை குறித்து டெஸ்லா நிறுவனத்தின் அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்" என்றார்.

விதி விலக்கு குறித்து பேசுவதற்கு முன்பு, இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பை டெஸ்லா நிறுவனம் தொடங்க வேண்டும் என கனரக தொழில்துறை அமைச்சகம் கடந்தவாரம் தெரிவித்திருந்தது. 

தற்போது, ​​முழுமையாக தயாரிக்கப்பட்ட யூனிட்டுகளாக (CBU) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 60-100 சதவீதம் வரை சுங்க வரி வதிக்கப்படுகிறது. இன்ஜின் அளவு, செலவு, காப்பீடு, சரக்கு (CIF) மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சுங்க வரி நிர்ணயிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com