சொந்த கட்சியை சங்கடப்படுத்திய சித்து; காங்கிரஸ் மீதான அதிருப்தியின் வெளிப்பாடா?

தலித் சமூகத்தின் மீது சித்துவுக்கு மரியாதை இல்லை என்பது அவரின் கருத்தின் மூலம் தெரியவருகிறது என அகாலி தளம் விமரிசித்துள்ளது.
நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக உள்ளது என்பதை காட்டி கொள்ள காங்கிரஸ் முயன்றுவருகிறது. ஆனால், நவ்ஜோத் சிங் சித்துவின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்திவருகிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சித்து இன்னும் திரும்ப பெறாத நிலையில், விவசாயிகளின் கொலையை கண்டிக்கும் விதமாக மொகாலியிலிருந்து உத்தரப்பிரதேச லக்கிம்பூர் கெரி வரை கட்சி தொண்டர்களுடன் பேரணி நடத்த சித்து திட்டமிட்டிருந்தார். இது, தற்போது கட்சிக்கே தலைவலியாக மாறியுள்ளது.

லக்கிம்பூர் சம்வபவத்தில் குற்றம்சாட்டப்பட்டவரான மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்யும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என சித்தி அறிவித்திருந்தார். அதன்படி, நடைபெற்ற போராட்டத்தின்போது, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னிக்காக அவர் காத்து கொண்டிருந்தார். அவர் வருவதற்கு தாமதமாக, சித்து கோபமடைந்துள்ளார். 

அப்போது அங்கிருந்த கேமராவில் சித்துவின் செயல்பாடுகள் பதிவாகியுள்ளது. அதில், சொந்த கட்சியை விமரிசித்திருக்கிறார். இதுகுறித்து வெளியான விடியோவில், சன்னி விரைவாக வந்துவிடுவார் எனக் கூறி சித்துவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் மாநில அமைச்சர் பர்கத் சிங்.

அதேபோல், பஞ்சாப் காங்கிரஸின் செயல் தலைவர்களில் ஒருவரான சுக்விந்தர் சிங் டானி, இந்த பேரணி வெற்றிபெறும் என சித்துவிடம் சொல்லி அமைதிப்படுத்த முயற்சிக்கிறார். அப்போது பதிலளித்து பேசிய சித்து, "வெற்றி எங்கே உள்ளது. பகவான் சித்து (சித்துவின் தந்தை) மகனின் தலைமையில் பேரணி நடத்த அனுமதி அளித்திருந்தால், நீங்கள் வெற்றியை பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் இறந்து கொண்டிருக்கிறது" என்றார்.

தலித் சமூகத்தின் மீது சித்துவுக்கு மரியாதை இல்லை என்பது அவரின் கருத்தின் மூலம் தெரியவருகிறது என அகாலி தளம் விமரிசித்துள்ளது. சன்னி தலித் சமூகத்தை சேர்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com