விஸ்வரூபம் எடுக்கும் மின் நெருக்கடி; நிலக்கரி பற்றாக்குறையும் மத்திய அரசின் உத்தரவாதமும்

தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்கள் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் இப்பிரச்னை முறையாக எதிர்கொள்ளப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. முன்னதாக, மின் நெருக்கடி ஏற்படலாம் என தில்லி கவலை தெரிவித்திருந்தது. 

உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தில்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்ப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, மின்சார ஆலைகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக பஞ்சாப் மாநில மின்சார கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிக அளவில் கனமழை பெய்ததன் காரணமாகவே நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதாக மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "கடந்த பல ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், செப்டம்பர் மற்றும் குறிப்பாக அக்டோபரில் நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோம் மிக அதிகமாக இருந்தது. இன்னும் மூன்று நான்கு நாட்களில், எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.

தில்லியில் உள்ள இரண்டு மின் நிலையங்களை இயக்குவதற்கான எரிவாயுவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து தரும் என எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தில்லி அருகே உள்ள இரண்டு மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை பூர்த்தி செய்வதற்கு நிலக்கரியை அதிகம் விநியோகம் செய்யும்படி தேசிய அணுமின் சக்தி கழகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நிலக்கரி இருப்பை நிலக்கரி அமைச்சகம் தலைமையிலான அமைச்சரவை குழு கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில் ஒரு நாளைக்கு 1.6 மெட்ரிக் டன் நிலக்கரியை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றும் அதன் பிறகு ஒரு நாளைக்கு 1.7 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவதற்கு நான்கு காரணங்களை அரசு பட்டியலிட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேவைப்படும் மின்சாரம், நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் பெய்த கனமழை, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் நிலக்கரி நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னை காலம் காலமாக இருந்துவருகிறுது.

உலகிலேயே அதிகம் நிலக்கரி பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளசது. முன்னதாக, சீனாவுக்கும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டதையடுத்து அங்கு பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இந்நிலையில், இந்தியாவின் மின் நெருக்கடி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com