கோப்புப்படம்
கோப்புப்படம்

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? அறிந்திராத தகவல்கள் இதோ!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறை சம்பவத்தின்போது, தான் மல்யுத்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இருந்ததாக ஆஷிஷ் மிஸ்ரா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா (நேற்று) சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் லக்கிம்பூர் கெரியில் வன்முறை சம்பவம் நடைபெற்றபோது ஆஷிஷ் மிஸ்ரா எங்கிருந்தார் போன்ற பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என உத்தரப் பிரதேச காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவம் நிகழ்ந்தபோது அங்கிருந்து 4லிருந்து 5 கிமீ தொலைவில் நடைபெற்ற மல்யுத்த விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் இருந்ததாக லக்கிம்பூர் சம்பவம் குறித்து ஆஷிஷ் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் இருந்த காவல்துறையினரிடமும் மக்களிடமும் விசாரணை நடத்தியபோது, ஆஷிஷ் மிஸ்ரா மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த நிகழ்ச்சியில் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதேபோல், ஆஷிஷ் மிஸ்ரா பயன்படுத்திய செல்லிடப்பேசியின் சிக்னல் சம்பவம் நடைபெற்றபோது அவர் அங்கு அருகில்தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என தகவல் அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், இதை மறுத்த ஆஷிஷ் மிஸ்ரா, குற்றச் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள அரிசி ஆலையில் தான் இருந்ததால் சிக்னர் டவர் அங்கிருந்து கிடைத்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆஷிஷ் மிஸ்ராவின் வாக்குமூலத்தில் பல முன்னுக்கு பின் முரணான கருத்துகள் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் விவசாயிகளுக்கு எதிராக தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. அதில், காரை ஓட்டி வந்த ஹரி ஓம் என்ற ஓட்டுநர் உள்பட மூன்று பேரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது ஏற்றப்பட்ட மகேந்திர தார் காரை ஹரி ஓம்தான் ஓட்டி வந்தார் என முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் ஆராய்ந்த விடியோவில், காரை ஓட்டிவரும் நபர் வெள்ளை நிற சட்டை அல்லது குர்தாவை அணிந்திருப்பது தெளிவாகிறது. நேர்மாறாக, மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டபோது, ஹரி ஓம் மஞ்சள் நற சட்டையையே அணிந்திருந்தார்.

இம்மாதிரியாக, பல தகவல்கள்  முன்னுக்கு பின் முரணாக உள்ளதாலும் சரியான தகவல்களை அளிக்காததாலும் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், அவர் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 நாள்களுக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக, இம்மாதிரியான கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துவிடுவர். ஆனால், ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை விஐபி என்பதால் அவர் கைது செய்யப்படவில்லையே என கேள்வி எழுப்பப்பட்டது. முன்னதாக, ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com