அச்சம் கொள்ள வைக்கும் மின் தடை; மத்திய மின்துறை அமைச்சர் தந்த விளக்கம்

மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தில்லியில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர். கே. சிங்
ஆர். கே. சிங்

கெயில் மற்றும் டாடா நிறுவனங்களிலிருந்து வரும் தவறான தகவல்களால் நிலக்கரி பற்றாக்குறை குறித்து தேவையற்ற பீதி உருவாக்கப்படுவதாக மத்திய மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். 

மின் உற்பத்தி குறித்து தேசிய தலைநகர் தில்லி உள்பட ஆறு மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அவர் பேசுகையில். "எங்களிடம் போதுமான மின்சாரம் உள்ளது. நாங்கள் முழு நாட்டிற்கும் மின்சாரம் வழங்குகிறோம். யார் வேண்டுமானாலும், எனக்கு ஒரு கோரிக்கையை கொடுங்கள், நான் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவேன்.

தேவையற்ற பீதி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் நான்கு நாட்களுக்கு தேவையாக இருப்பு உள்ளது. தில்லியில் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். மின் தடை இருக்காது. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் அதன் விநியோகம் தொடரும். எந்த சூழ்நிலையிலும் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படாது.

தில்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படவுள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. குறிப்பாக, பஞ்சாபில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அங்கு பல பகுதிகளில் சுழற்சி முறையில் மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மின் நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

விநியோகம் பாதிக்கப்படவுள்ளதாக கெயில் இந்திய நிறுவனத்தின் அலுவலர்கள் தவறான தகவல் அளித்த பிறகு மின் நெருக்கடி குறித்த பீதி உருவானதாக ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தேவைக்கு ஏற்றார்போல் நிலக்கரி பெறப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு தேவைப்படும் இருப்பு நம்மிடம் உள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது. நமக்கு மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டுவருகிறது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com