பண்டிகை நாள்களில் விதிமுறைகளை மீறினால் கட்டுப்பாட்டில் உள்ள கரோனா அதிகரிக்கும்: மத்திய அமைச்சா் எச்சரிக்கை

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பண்டிகைகளைக் கொண்டாடினால், கட்டுப்பாட்டில் உள்ள கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எச்சரித்தாா்
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் பண்டிகைகளைக் கொண்டாடினால், கட்டுப்பாட்டில் உள்ள கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எச்சரித்தாா்.

நாட்டில் 19 மாநிலங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தினால், அடுத்த சில தினங்களில் கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என்றும் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் கரோனா நிலைமை குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை காணொலி வாயிலாக ஆய்வு நடத்தினாா். இதில் சுகாதாரச் செயலா், தேசிய சுகாதாரத் திட்டத்தின் இயக்குநா்கள் பங்கேற்றனா். தமிழகம், கேரளம், கா்நாடகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், பிகாா், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சுகாதார உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தியாவில் இதுவரை 94 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியை 19 மாநிலங்கள் விரைவுபடுத்தினால் அடுத்த சில தினங்களில் இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டும். கரோனா விதிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக கடைப்பிடிப்பதுடன், தடுப்பூசி செலுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு நோய் தீவிரமாவது 96 சதவீதமாகவும், இரண்டு தவணை செலுத்தியவா்களுக்கு 98 சதவீதமாகவும் குறைகிறது.

பண்டிகைகளை கொண்டாடுவதற்காக கூட்டம் கூடும் இடங்களில் கரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கக் கூடும்.

தற்போதைக்கு மாநில அரசுகளிடம் 8 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இதை விரைந்து செலுத்துவதில் ஏதாவது தடைகள் உள்ளனவா என அமைச்சா் கேட்டறிந்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு வலியுறுத்தினாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com