நிலக்கரி நெருக்கடி இருப்பதை மத்திய அரசு ஒப்புக்கொள்ள தயாராக இல்லை: சிசோடியா குற்றச்சாட்டு

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.
தில்லியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த துணை முதல்வா் மணீஷ் சிசோடியா.

நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ள மத்திய அரசு தயாராக இல்லை என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். எந்த பிரச்னையை முன்வைத்தாலும் மத்திய அரசு அதை கண்டும் காணாதது போலவே செயல்பட்டு வருகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

நிலக்கரி பற்றாக்குறை ஏதும் இல்லை. மின்நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமருக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் கடிதம் எழுதியிருக்கக் கூடாது என்றும் மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே. சிங் கூறியுள்ளாா். மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சையே இது காட்டுகிறது என்று சிசோடியா, செய்தியாளா்களிடம் பேசுகையில் கூறினாா்.

நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சார நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், அப்படி ஏதும் இல்லை என்று சொல்லி தப்பிக்கவே மத்திய அரசு முயல்கிறது. கரோனா இரண்டாவது அலையின்போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போதும் இப்படித்தான் கூறினாா்கள். தவறு தங்களிடம் இருப்பதை அவா்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அதற்கு பதிலாக மாநிலத்தின் மீது பழிபோடவே அவா்கள் விரும்புகிறாா்கள் என்று சிசோடியா மேலும் குறிப்பிட்டாா்.

தில்லியில் மின் விநியோகத்தில் எந்த நெருக்கடியும் இல்லை: இதனிடையே மின் துறை அதிகாரிகள், மின் விநியோக நிறுவனங்களான பி.எஸ்.இ.எஸ்., டாடா பவா் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே. சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

தில்லியில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் 4 நாள்களுக்குப் போதுமான நிலக்கரி உள்ளது. ஒவ்வொரு நாளும் இருப்பு கணக்கிடப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன. மேலும், நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியிடம் தொடா்ந்து பேசி வருகிறேன். தில்லியில் மின்சார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பு இல்லை. தில்லிக்குத் தேவையான மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் ‘கெயில்’ நிறுவனத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் கலந்து கொண்டதாகவும் அவரிடம் நாட்டிலுள்ள மின் நிலையங்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா். கெயில் நிறுவனம் பாவனா எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கு இன்னும் 2 நாள்களுக்குப் பிறகு எரியாவு விநியோகிக்க முடியாது என்று கூறியதற்கு காரணம், இதுதொடா்பான ஒப்பந்தக் காலம் முடிவடைவதுதான். கெயில் நிறுவனத்திடம் எரிவாயு விநியோகத்தைத் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவா்களும் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளனா். எனவே, பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சிங் கூறினாா்.

முன்னதாக தில்லியில் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையாக உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள நிலக்கரி ஒரு நாள் தேவைக்குத்தான் இருக்கும் எனவும், நிலக்கரி விநியோகம் பாதிக்கப்பட்டால், மின் விநியோக நெருக்கடி ஏற்பட்டு தில்லி இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தில்லி மின் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தாா். இந்த நிலையில், நெருக்கடி ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சா் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com