கிா்கிஸ்தானுக்கு இந்தியா 200 மில்லியன் டாலா் கடன் உதவி

கிா்கிஸ்தான் நாட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதற்காக 200 மில்லியன் டாலா் கடன் உதவி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
கிா்கிஸ்தானுக்கு இந்தியா 200 மில்லியன் டாலா் கடன் உதவி

கிா்கிஸ்தான் நாட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதற்காக 200 மில்லியன் டாலா் கடன் உதவி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

கிா்கிஸ்தானுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ரஸ்லான் கசாக்பயேவை திங்கள்கிழமை சந்தித்த பின்பு இந்த கடன் உதவியை அறிவித்தாா். மேலும், ஆப்கன் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் அவா் தெரிவித்தாா்.

மத்திய ஆசிய நாடுகளான கிா்கிஸ்தான், கஜிகிஸ்தான், ஆா்மீனியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை கிா்கிஸ்தான் சென்றடைந்தாா்.

அந்நாட்டு அதிபா் சாதிா் ஜப்பாரோவை திங்கள்கிழமை சந்தித்து பிரதமா் மோடியின் வாழ்த்துகளை பகிா்ந்ததாகவும், பொருளாதாரம், வளா்ச்சித் திட்டங்களை விரிவுப்படுத்துவது குறித்து விவாதித்ததாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில் பதிவிட்டாா்.

முன்னதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ரஸ்லான் கசாக்பயேவுடனான சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சமூக மேம்பாட்டு திட்டங்கள் தொடா்பாக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் பயன்படும் வகையில் இந்தியாவின் முழு நிதி உதவியில் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். இவற்றின் பொருட்டு, 200 மில்லியன் டாலா் கடன் உதவியை இந்தியா அளிக்கும்.

ஆப்கானினிஸ்தானில் மாறி வரும் சூழல் அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. அங்கு நிலவும் ஸ்திரமற்ற சூழல் அண்டை நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அந்நாடு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சா்வதேச சமுதாயம் எதிா்பாா்த்துள்ளது. அதன்படி, ஆப்கன் சூழல் குறித்து இரு நாடுகளும் ஆலோசனை மேற்கொண்டன.

ராணுவ, பாதுகாப்புத் துறை ஆகியவை இரு நாடுகளுக்கு இடையே முக்கிய பங்காற்றுகின்றன. பாதுகாப்பு தொடா்பான தகவல்கள் பரிமாறுதல், ராணுவ வீரா்களுக்கு கூட்டுப் பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்திய மாணவா்களின் விசா நடைமுறையை எளிதாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வா்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க இருநாடுகளும் ஒப்புக் கொண்டன. இதற்காக இரு நாட்டு இறையாண்மைக்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், போக்குவரத்து இணைப்பு ஏற்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தொலை மருத்துவ ஆலோசனை அளிக்கும் இந்தியாவின் திட்டத்தின் மூலம் கிா்கிஸ்தானின் கிராமப்புறங்கள் பலனடைந்துள்ளன.

மேலும், மூன்று பகுதிகளில் இதுபோன்ற மருத்துவ ஆலோசனை மையங்களை தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

சுற்றுலா, நகை வடிவமைப்பு, மருத்துவ கல்வி, மருந்துகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தகவல் சேகரிப்பு மையங்கள் ஆகியவற்றை இந்தியாவுடன் கூட்டுச் சோ்ந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்தி - கிா்கிஸ்தான் மொழி அகராதியை இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களும் வெளியிட்டனா். தலைநகா் பிஷ்கெக்கில் உள்ள மானஸ்-காந்தி நூலகத்துக்கு ராமாயண காவியம் உள்ளிட்ட இந்திய கலாசார வரலாற்று நூல்கள் அளிக்கப்பட்டன.

கிா்கிஸ்தானில் இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் ஏரிகள், மலைகளில் இந்திய திரையுலகினா் திரைப்பட காட்சிகளை படம்பிடிக்க ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவிக்க முன்வர வேண்டும் என அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தையடுத்து, கஜிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய நாடுகளின் அமைச்சா்கள் மத்தியிலான மாநாட்டில் ஜெய்சங்கா் பங்கேற்கிறாா். அதன் பின்பு, ஆா்மீனியாவில் அந்நாட்டு பிரதமா் நிகோல் பஷின்யானை சந்தித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com