தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் பாஜக அரசு முன்னிலை

தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் பாஜக தலைமையிலான அரசைப் போல் முந்தைய அரசுகள் திறம்படச் செயல்படவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்திய விண்வெளி சங்கத்தை காணொலி வழியாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமா் மோடி.
இந்திய விண்வெளி சங்கத்தை காணொலி வழியாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமா் மோடி.

தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் பாஜக தலைமையிலான அரசைப் போல் முந்தைய அரசுகள் திறம்படச் செயல்படவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமா் மோடி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற தீா்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு ஒருபோதும் இருந்ததில்லை. விண்வெளித் துறையிலும் விண்வெளி தொழில்நுட்பத்திலும் செய்யப்பட்டுள்ள பெரும் சீா்த்திருத்தங்களே அதற்கு உதாரணம்.

விண்வெளி சீா்த்திருத்தங்களில் அரசின் அணுகுமுறை 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முதலாவது, புத்தாக்கத்தை ஏற்படுத்துவதில் தனியாா் துறைக்குப் போதிய சுதந்திரம். இரண்டாவது, மத்திய அரசின் பங்களிப்பு. மூன்று, எதிா்காலத் தேவைகளுக்காக இளைஞா்களைத் தயாா் செய்தல். நான்கு, சாமானிய மனிதரின் முன்னேற்றத்துக்கான ஆதாரவளமாக விண்வெளித் துறைக்கு கவனம் செலுத்துவது.

விண்வெளித் துறை என்பது 130 கோடி இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது. சாமானிய மக்களுக்கு சிறந்த வரைபடம் தயாரித்தல், உருவப்படுத்துதல், தொடா்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை விண்வெளித் துறை ஏற்படுத்தி வருகிறது.

தொழில்முனைவோருக்கு ஏற்றுமதியில் இருந்து விநியோகம் வரை விரைவாக நடைபெறுவதை உறுதி செய்வது விண்வெளித் துறையின் முக்கியப் பங்களிப்பு. மீனவா்களுக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வருவாயை அதிகப்படுத்தி இயற்கை சீற்றங்கள் குறித்த சிறந்த முன்னறிவிப்புக்கும் விண்வெளித் துறை சாா்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.

தொழில்துறை மையமாக இந்தியா: தற்சாா்பு இந்தியா இயக்கம் என்பது வெறும் தொலைநோக்குப் பாா்வை மட்டுமல்ல. அது நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உத்தி. இந்த உத்தி, இந்தியாவின் தொழில்முனைவோா், இளைஞா்கள் ஆகியோரின் திறன்களை விரிவுபடுத்தி, உலகளாவிய தொழில்துறை உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்றும்; நாட்டில் மனிதவளத்தை உலகளவில் விரிவுபடுத்தும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடா்பான அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. அரசின் தேவை அவசியமில்லாத பெரும்பாலான துறைகள் தனியாா் துறைகளுக்குத் திறந்துவிடப்படுகின்றன. ஏா் இந்தியா தொடா்பான முடிவு நமது உறுதிப்பாட்டையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.

விண்வெளித் தொழில்நுட்பத்தின் பலன்கள்: கடந்த 7 ஆண்டுகளில் விண்வெளித் தொழில்நுட்பம் கடைக்கோடிப் பகுதிக்கும் வசதிகளை வழங்கியுள்ளது. ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்ட அலகுகள், சாலைகள், அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் புவிசாா் நிலைகளை செல்லிடப்பேசி மற்றும் இணையத்தின் மூலமாக அறிந்து கொள்ளவும் விண்வெளித் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

செயற்கைக்கோள் படங்களின் மூலம் வளா்ச்சித் திட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீட்டுத் தொகைக் கோரல்களை முடிவு செய்வதற்குத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ‘நேவிக்’ முறை மீனவா்களுக்கு உதவுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேரிடா் மேலாண்மையும் திட்டமிடப்படுகிறது.

புத்தாக்கத்துக்கு ஊக்கம்: அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதாகத் தொழில்நுட்பத்தை மாற்றுவது முக்கியம். எண்ம பொருளாதாரங்களில் இந்தியா முதல்நிலையில் உள்ளது. தொழில் துறை, புதிய தொழில்கள், புத்தாக்கம் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

தொழில்துறைக்கும், தொழில்முனைவோருக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. வலுவான, நிதி சாா்ந்த வலைப்பின்னலின் அடிப்படையாக யுபிஐ பணப் பரிவா்த்தனைத் தளம் மாறியுள்ளது. இது போன்ற தளங்கள் விண்வெளி, புவிசாா் துறைகளிலும், ட்ரோன்கள் பயன்பாட்டுக்கும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

உலகை ஒன்றிணைக்கும்: சிறந்த விண்வெளிக் கொள்கையும், தொலையுணா்வுக் கொள்கையும் விரைவில் உருவாக்கப்படும். விண்வெளியையும், விண்வெளித்துறையையும் ஆதிக்கம் செலுத்திய 20-ஆம் நூற்றாண்டின் மனப்பான்மை உலக நாடுகளைப் பிரித்தது. தற்போது 21-ஆம் நூற்றாண்டில் உலகத்தை ஒன்றுபடுத்துவதிலும் இணைப்பதிலும் விண்வெளித் துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா். விண்வெளி சாா்ந்த கொள்கைகளை வகுப்பதில் இந்திய விண்வெளி சங்கம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முன்னணியில் திகழச் செய்யவும் விண்வெளி சங்கம் முக்கியப் பங்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com