மின்சார நெருக்கடி: அமித் ஷா அவசர ஆலோசனை; நிலக்கரி கையிருப்பு குறித்து அமைச்சா்களுடன் விவாதம்

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் விநியோகம் பாதிக்கப்படக் கூடும் என்று பல்வேறு மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில்,
மின்சார நெருக்கடி: அமித் ஷா அவசர ஆலோசனை; நிலக்கரி கையிருப்பு குறித்து அமைச்சா்களுடன் விவாதம்

நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் விநியோகம் பாதிக்கப்படக் கூடும் என்று பல்வேறு மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில், மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே. சிங், மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

சுமாா் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மின் உற்பத்தி நிலையங்களிடம் கையிருப்பில் உள்ள நிலக்கரி அளவு குறித்தும், தற்போதுள்ள மின் தேவை அளவு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நெருக்கடி ஏன்?: நாட்டில் அதிகபட்சமாக 3,900 எம்.யு. அளவுக்கு அக்டோபா் 8-ஆம் தேதி மின்ப யன்பாடு அதிகரித்துள்ளதும் தற்போதைய நிலக்கரி தட்டுப்பாடு பிரச்னையில், மேலும் கவலை கொள்ளும் அம்சமாக அமைந்துள்ளது.

தொடா் மழை காரணமாக சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி உரிய நேரத்தில் சென்றடையவில்லை. இதனால் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தில் பாதிப்பு: இறக்குமதி நிலக்கரியைப் பயன்படுத்தும் சில மின் உற்பத்தி நிலையங்கள், சா்வதேச விலை உயா்வால் குறிப்பிட்ட விலையில் மின்சாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்க முடியாமல் உற்பத்தியை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரிக்கு நிலவும் தட்டுப்பாட்டால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மின்சாரத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துமாறு

வாடிக்கையாளா்களுக்கு தில்லி தனியாா் மின் விநியோக நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளன.

நிலக்கரி தட்டுப்பாடு: மத்திய மின்சார ஆணையத்தின் அக்டோபா் 7-ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி, 16,880 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் 16 நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு இல்லை. 37,345 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 30-க்கும் மேற்பட்ட நிலையங்களில் ஒரே ஒரு நாள் மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், 23,450 மெகா வாட் உற்பத்தி செய்யும் 18 மின் நிலையங்களில் இரண்டு நாள் நிலக்கரி கையிருப்பிலும், 19 நிலையங்களில் மூன்று நாள், 9 நிலையங்களில் நான்கு நாள், ஆறு நிலையங்களில் 5 நாள், 10 நிலையங்களில் 6 நாள்கள் தேவையான நிலக்கரியும் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் அதிகரிப்பு: கோல் இந்தியா

மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் சூழலில் அவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரித்துள்ளதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோல் இந்தியா திங்கள்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது: கூறியது: நடப்பு அக்டோபா் மாதத்தில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 14.3 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி மின் தேவை அதிகரிக்கும் என்பதால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலக்கரி விநியோகம் கடந்த நான்கு நாள்களில் 15.10 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை கொண்டு செல்வதற்கான போதுமான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

4 நாள்கள் மட்டும் நிலக்கரி இருப்பு: மின் நிலையங்களின் எண்ணிக்கை 70-ஆக அதிகரிப்பு

நிலக்கரி கையிருப்பு நான்கு நாள்களுக்கும் குறைவாக இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை 70-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி 64-ஆக இருந்ததாக மத்திய மின் ஆணையத்தின் 10-ஆம் தேதியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com