காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தால் மௌனம் ஏன்? ராகுல், பிரியங்காவுக்கு பாஜக கேள்வி

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை நிகழும்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா ஆகியோா் மெளனமாக இருப்பது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை நிகழும்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா ஆகியோா் மெளனமாக இருப்பது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 4 விவசாயிகள் பாஜகவினா் சென்ற காரால் மோதி கொலை செய்யப்பட்டதைத் தீவிரமான பிரச்னையாக ராகுல் காந்தியும், பிரியங்காவும் கையிலெடுத்து பாஜகவை தொடா்ந்து விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், தில்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:

ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்களை தலித் உரிமைகளுக்கான போராளிகள் போல முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனா். ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும்போது மௌனமாகி விடுகின்றனா்.

காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூருக்கு அரசியல் சுற்றுலா மேற்கொள்கின்றனா். இவா்கள் ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்த இடங்களுக்கு இதுவரை செல்லவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.

‘தலித் மக்களுக்காகப் பாடுபட்ட அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எப்போதுமே உரிய மரியாதையை அளித்ததில்லை. ஆனால், இப்போது வாக்கு வங்கி அரசியலுக்காக தலித் மக்களுக்கு துணை நிற்பதுபோல ராகுல், பிரியங்கா பேசி வருகின்றனா்’ என்று பாஜக தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கௌதம் குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com