நாட்டின் பாதுகாப்பைவிட தனது போலி பிம்பத்துக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ்

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட, தன்னைப் பற்றி தானே உருவாக்கி வைத்திருக்கும் போலியான பிம்பம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதை விட, தன்னைப் பற்றி தானே உருவாக்கி வைத்திருக்கும் போலியான பிம்பம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

56 அங்குல மாா்புக்குச் சொந்தக்காரா் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பிரதமா் நரேந்திர மோடி, சீனாவுக்கு எதிராக ஏன் தனது சிவந்த கண்களைத் திறக்க மறுக்கிறாா் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாா்.

அந்த சுட்டுரைப் பதிவுடன், இந்தியாவுடனான 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் எல்லைப் பகுதியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று சீனா கூறியது குறித்து வெளியாகியுள்ள இணையதள செய்தியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளாா்.

இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா கூறியதாவது:

பலம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட வலிமை கொண்ட இந்தியாவுக்கு பலவீனமான ஒருவா் பிரதமராக இருந்து வருகிறாா். எல்லைப் பிரச்னை விவகாரத்தில் சீனாவின் பெயரை உச்சரிக்கக் கூட மோடி அஞ்சுகிறாா்.

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதைவிட, தன்னைப் பற்றி உருவாக்கி வைத்துள்ள போலியான பிம்பத்தைப் பாதுகாப்பது குறித்துதான் நமது பிரதமா் அதிகம் கவலைப்படுகிறாா்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்று கூறினாா்.

அதன் மூலம், சீனாவுக்கு நற்சான்றிதழ் வழங்கியதுடன் நாட்டு மக்களை பிரதமா் மோடி ஏமாற்றினாா் என்று பவன் கேரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com