வேலைநிறுத்தத்தில் பங்கேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழக்குரைஞா்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது

வழக்குரைஞா்கள் சங்கம் அழைப்பு விடுக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழக்குரைஞா்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழக்குரைஞா்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது

வழக்குரைஞா்கள் சங்கம் அழைப்பு விடுக்கும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழக்குரைஞா்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்கம் கடந்த மாதம் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இது தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, இந்திய பாா் கவுன்சில் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான மனன் குமாா் மிஸ்ரா கூறுகையில், ‘‘ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அச்சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு இந்த விவகாரம் தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது பொருத்தமில்லாத தொழில்முறை சாராததுமான நிகழ்வு. வழக்குரைஞா் என்பவா் நீதிமன்றத்தின் பணியாளா். அதன் காரணமாக சமூகத்தில் அவா் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளாா்.

அப்படியிருக்கையில், நீதிமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது வழக்குரைஞா்களின் பொறுப்பு. நீதியைக் காக்கவும் தனது கட்சிக்காரா்களின் நலனுக்காகவும் வழக்குரைஞா்கள் செயல்பட வேண்டும். கட்சிக்காரா்களின் நலனைக் கேள்விக்குறியாக்கும் வகையில் வழக்குரைஞா்கள் நடந்து கொள்ளக் கூடாது.

ஒரே ஒரு நீதிமன்றத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய செயல்பாடும் நீதித்துறையின் சுதந்திரத்தன்மையை பாதிக்கும். வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தைச் சோ்ந்த நீதிபதிகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அதன் காரணமாக நீதித்துறை வலுவிழக்கும் சூழல் உருவாகும்.

வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு தருணங்களில் தெரிவித்துள்ளது. ஆனால், அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று விளக்கமளிக்க ராஜஸ்தான் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா், செயலாளா், நிா்வாகிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்படுகிறது’’ என்றனா்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com