கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம்; கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதலா?

எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் வழங்கியிருப்பது மாநில சுயாட்சி குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லை பகுதியை பகிர்ந்துள்ள மூன்று மாநிலங்களுக்கு உட்பட்ட 50 கிமீ தொலைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் சோதனை செய்யவும் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டதற்கு சமீபத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலே காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் வழங்கியிருப்பது மாநில சுயாட்சி குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரண்ஜீத் ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச எல்லை பகுதிகளை கொண்ட மாநிலங்களுக்கு உட்பட்ட 50 கிமீ தொலைவுக்கு எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். அரசின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பகுத்தறிவில்லாத இந்த முடிவை உடனயடியாக திரும்பபெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை களையும் விதமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இது நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியான பிரச்னைகளை எழுப்பும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இது அரசியல் ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முடிவு. எல்லை பாதுகாப்பு படையின் முக்கிய நோக்கம் எல்லைகளை பாதுகாத்து ஊடுருவலை நிறுத்துவதே ஆகும். அப்படி, வரையறுக்கப்பட்ட பகுதிகளில் அவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதை சமீபத்திய சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

இந்த முடிவால், எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை செய்யும் போதும் பறிமுதல் மேற்கொள்ளும் போதும் உள்ளூர் காவல்துறையினர், கிராமத்தினர் ஆகியோர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எல்லை புறக்காவல் நிலையங்களைச் சுற்றியே எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால், தற்போது சில மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அலுவலர் ஒருவர், "ஏதேனும் வழக்கில் எங்களுக்கு உளவுத்துறை தகவல் அளித்தால், உள்ளூர் காவல்துறையின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம். சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

புதிய அறிவிப்பின்படி, மேற்குவங்கம், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொள்ளவும் கைது செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டம், பாஸ்போர்ட் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் (இந்திய நுழைவு) ஆகியவற்றின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அசாம், மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுல் உள்ளூர் காவல்துறை போல் கைது நடவடிக்கை மேற்கொள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்திய - பாகிஸ்தான், இந்திய - வங்கதேசம் ஆகிய சர்வதேச எல்லைகளை கொண்ட மாநிலங்களில் 50 கிமீ தொலைவுக்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் சோதனை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 15 கிமீ தொலைவு வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூடுதலாக, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர், லடாக் ஆகிய மாநிலங்களில் கைது மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படையின் வரம்பு 80 கிமீ தொலைவிலிருந்து 50 கிமீக்கு குறைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்ததுபோல், ராஜஸ்தானில் அவர்களின் அதிகார வரம்பு 50 கிமீ தொலைவிலேயே தொடர்கிறது. மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு வகுக்கப்படவில்லை.

அதேபோல், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் எல்லை வரம்பு வகுக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில், உள்நாட்டு பாதுகாப்புக்காக அவர்கள் குவிக்கப்படுவதால் எப்போதும் போல் எல்லை பாதுகாப்பு படையினர் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com