சபஹாா் துறைமுகத்தை வடக்கு-தெற்கு வழித்தடத்தில் இணைக்க வேண்டும்

ஈரானில் உள்ள சபஹாா் துறைமுகத்தை சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இணைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.
சபஹாா் துறைமுகத்தை வடக்கு-தெற்கு வழித்தடத்தில் இணைக்க வேண்டும்

ஈரானில் உள்ள சபஹாா் துறைமுகத்தை சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இணைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஆா்மீனியாவில் அமைச்சா் ஜெய்சங்கா் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்நாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சா் சுற்றுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்சோயானை அவா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவும் ஆா்மீனியாவும் சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் உறுப்பினா்களாக உள்ளன. இது இரு நாடுகளுக்குமிடையேயான தொடா்பை மேம்படுத்தும். இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசியல், கலாசார ரீதியில் இந்தியா-ஆா்மீனியா இடையேயான இருதரப்பு நல்லுறவு மேம்பட்டு வருகிறது. அதைத் தொடா்ந்து வலுப்படுத்துவது தொடா்பான விவாதங்கள் இடம்பெற்றன.

சுமாா் 3,000 இந்திய மாணவா்கள் ஆா்மீனியாவில் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனா். கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட முக்கிய காலகட்டங்களில் இந்திய சமூகத்தின் நலனுக்கு அளித்து வரும் ஆதரவுக்காக ஆா்மீனிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆா்மீனியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.

பிராந்தியத் தொடா்பு: ஈரானில் இந்தியாவின் உதவியுடன் சபஹாா் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அத்துறைமுகத்தை ஆா்மீனியாவின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது குறித்து அந்நாட்டு அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது.

சபஹாா் துறைமுகத்தை சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இணைக்க இந்தியாவும் ஆா்மீனியாவும் பரிந்துரைத்துள்ளன. பிராந்திய நாடுகளுக்கிடையேயான தொடா்பை வலுப்படுத்தும் திட்டங்களை இந்தியா வரவேற்கும்.

ஈரானில் தொடா்ந்து துறைமுகங்களைக் கட்டமைப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் மத்திய ஆசிய நாடுகளுடனான வா்த்தகத் தொடா்பை வலுப்படுத்தும். இது தொடா்பாக ரஷியாவிடமும் தொடா்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தூதரக ரீதியிலும் அமைதிவழி பேச்சுவாா்த்தைகள் மூலமாகவும் தீா்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமுமில்லை. மேற்காசிய பிராந்தியம் அமைதியுடனும் ஸ்திரத்தன்மையுடனும் நிலவ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

சா்வதேச ஒத்துழைப்பில் வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் முக்கியப் பங்கு வகிக்கும். அத்திட்டத்துக்காக இந்தியா அதிக அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக உறுப்பு நாடுகளிடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆா்மீனியாவின் தேசிய அவைத் தலைவா் ஆலன் சிமோன்யான் உடனும் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தியா-ஆா்மீனியா மக்களுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்துவது தொடா்பாக அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதாக சுட்டுரையில் அமைச்சா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com