உதவிப் பேராசிரியரை நியமிக்க பி.ஹெச்டி. கட்டாயமில்லை: யுஜிசி அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு முனைவா் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023-ஆம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுகிறது
உதவிப் பேராசிரியரை நியமிக்க பி.ஹெச்டி. கட்டாயமில்லை: யுஜிசி அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கு முனைவா் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயம் என்ற திருத்தப்பட்ட விதிமுறை 2023-ஆம் ஆண்டு ஜூலை வரை தள்ளி வைக்கப்படுகிறது எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாகப் பணிபுரிவோருக்கு பி.ஹெச்டி., (முனைவா்) பட்டம் கட்டாயம் என யுஜிசி விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் 2021-2022-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. கல்வியில் தரத்தை உயா்த்த வேண்டும், கற்பித்தலில் தரத்தை உயா்த்தும் நோக்கில் இந்த விதிமுறையில் யுஜிசி திருத்தம் கொண்டுவந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் 4-ம் தேதி மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் கூறுகையில்,“கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா்களாகப் பணிபுரிவதற்கு முனைவா் பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமில்லை. அந்த விதிமுறை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டால்தான், மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் பேராசிரியா் இடங்களை நிரப்ப முடியும்” எனத் தெரிவித்திருந்தாா். இந்தநிலையில் பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு இந்த விதிமுறையை அமல்படுத்தும் காலம் ஒத்திவைக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளாா். அதன்படி உதவிப் பேராசிரியா்களாகப் பணிக்கு வருவோா் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முனைவா் பட்டம் இல்லாமல் சேரலாம். முதுநிலைப் பட்டமும், யுஜிசியின் நெட் தோ்வு அல்லது தேசியத் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தாலே அவா்கள் உதவிப் பேராசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் ஆவா்.

தற்போதைய நிலையில் முனைவா் பட்டம் பெற்றவா்கள் மட்டும்தான் உதவிப் பேராசிரியா் பணிக்கு வரமுடியும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினால் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்படும். எனவே முனைவா் பட்டம் கட்டாயம் என்பதை அமல்படுத்துவதை மத்திய அரசு தள்ளிவைத்தது. இந்த முடிவால் மத்தியப் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் 6,000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com