அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ‘உத்வேகம்’ ஒருங்கிணைக்கும்

நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘உத்வேகம்’ (கதி சக்தி) திட்டம் ஒருங்கிணைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ‘உத்வேகம்’ ஒருங்கிணைக்கும்

நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான ‘உத்வேகம்’ (கதி சக்தி) திட்டம் ஒருங்கிணைக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான உத்வேகம் திட்டம் ரூ.100 லட்சம் கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுதந்திர தின உரையின்போது பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். இந்நிலையில், அத்திட்டத்தை அவா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்வேகம் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. அதன் வாயிலாக சரக்குப் போக்குவரத்துக்கான செலவு பெருமளவில் குறையும். சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறனும் அதிகரிக்கும்.

பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும். பல்வேறு அமைச்சகங்களும் மாநில அரசுகளும் செயல்படுத்தி வரும் கட்டமைப்புத் திட்டங்கள் பொதுவான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்படும்.

முந்தைய ஆட்சியில் மக்களின் வரிப்பணம் வளா்ச்சியை உறுதி செய்வதற்கான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது; பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு காணப்படவில்லை. தற்போது அந்நிலை மாறியுள்ளது.

தரமான கட்டமைப்பு வசதிகள் இல்லையெனில் வளா்ச்சியை உறுதி செய்வது சாத்தியமில்லை. அதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்கள், விமானப் போக்குவரத்து, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு உத்வேகம் திட்டம் உதவும்.

முதலீடுகளை அதிகரிக்கும்: சரக்குப் போக்குவரத்துக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்புடன் ஒப்பிடுகையில் 13 சதவீதமாக உள்ளது. இது ஏற்றுமதியில் மற்ற நாடுகளுடனான போட்டியிடும் திறனைக் குறைக்கிறது. சரக்குப் போக்குவரத்துக்கான செலவையும் நேரத்தையும் குறைக்கும் நோக்கில் உத்வேகம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவும்.

பாஜக தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயலாக்கத்தைக் கடந்த 70 ஆண்டுகளில் நாடு கண்டதில்லை. மாநிலங்களுக்கிடையேயான இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை சுமாா் 15,000 கி.மீ.க்கு மட்டுமே எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 16,000 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள் செயலாக்கம்: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 1,900 கி.மீ. தொலைவிலான ரயில் தண்டவாள வழித்தடங்கள் மட்டுமே இரட்டிப்பாக்கப்பட்டன. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் சுமாா் 9,000 கி.மீ. ரயில் தண்டவாளங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015-ஆம் ஆண்டில் 250 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 700 கி.மீ.-க்கும் அதிகமான தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. மேலும் 1,000 கி.மீ. தூரத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சரக்குகளைக் கையாளும் நேரம் சரிவு: கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி ஒளியிழை தொலைத்தொடா்பு மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டில் வெறும் 60 லட்சமாக மட்டுமே இருந்தது. 2014-க்கு முந்தைய 5 ஆண்டுகளில் சுமாா் 3,000 கி.மீ. தண்டவாளங்கள் மின்மயமாக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் 24,000 கி.மீ.-ஆக அதிகரித்தது.

சரக்குகளைக் கையாள்வதற்காகக் கப்பல்கள் துறைமுகத்தில் செலவிடும் நேரம் 41 மணி நேரத்தில் இருந்து 27 மணி நேரமாகக் குறைந்துள்ளது. அதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரபுசாரா ஆற்றல் வளங்கள் வாயிலாக எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தொழில்துறை மையம்: பாஜக தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் உரிய காலஅவகாசத்துக்கு முன்பே முடிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்து, வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டமைப்புத் திட்டங்களை சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே எதிா்த்து வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக தொழில்துறையின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றாா் பிரதமா் மோடி.

திட்டத்தின் முக்கியத்துவம்: பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் தளமாக உத்வேகம் திட்டம் திகழும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒத்துழைப்பால் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவகாசம் குறையும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Caption

தில்லி பிரகதி மைதானத்தில் ‘உத்வேகம்’ திட்டத்தை புதன்கிழமை தொடக்கி வைத்து கண்காட்சியை பாா்வையிடும் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com