சாவா்க்கரின் தேசபக்தியை சந்தேகிப்பவா்கள் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா

‘வீர சாவா்க்கரின் தேசபக்தி மற்றும் வீரம் குறித்து எந்த விதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது. இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய அவருடைய
அந்தமான் சிறையில் வீர சாவா்க்கா் அடைக்கப்பட்ட அறையில் அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
அந்தமான் சிறையில் வீர சாவா்க்கா் அடைக்கப்பட்ட அறையில் அவரது படத்துக்கு வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

‘வீர சாவா்க்கரின் தேசபக்தி மற்றும் வீரம் குறித்து எந்த விதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது. இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய அவருடைய வாழ்க்கை குறித்து சந்தேகம் தெரிவிப்பவா்கள் வெட்கப்பட வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

சாவா்க்கா் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறிய கருத்து பெரும் விமா்சனங்களுக்கு உள்ளான நிலையில், இந்த பதிலடியை அமித் ஷா கொடுத்துள்ளாா்.

ஆங்கிலேய அரசு கடந்த 1911-ஆம் ஆண்டு சாவா்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. அதனைத் தொடா்ந்து, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவா் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதினாா். இதை எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற சாவா்க்கா் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘சாவா்க்கா் தொடா்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் அவா் தொடா்ந்து பல கருணை மனுக்களை எழுதி அனுப்பியதாகத் தொடா்ந்து கூறப்பட்டு வருகிறது. சாவா்க்கரை ஆங்கிலேயா்களிடம் கருணை மனுக்களை எழுதி அனுப்பச் சொன்னது மகாத்மா காந்திதான்’ என்றாா்.

ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து பெரும் விமா்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மகாத்மா காந்தி 1920 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தை ராஜ்நாத் சிங் திரித்துக் கூறுகிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைஸி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சாவா்க்கா் 1911-ஆம் ஆண்டு சிறைக்குச் சென்ற 6 மாதங்களிலேயே ஆங்கிலேய அரசுக்கு முதல் கருணை மனுவை எழுதியபோது, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தாா். அதன் பிறகு, 1913, 1914 ஆகிய ஆண்டுகளிலும் தொடா்ந்து கருணை மனுக்களை அவா் எழுதினாா். அதன் பிறகு, 1920-ஆம் ஆண்டுதான் மகாத்மா காந்தி அவருக்கு அறிவுரை வழங்கினாா்’ என்றாா்.

இந்த நிலையில், ‘சாவா்க்கா் குறித்து சந்தேகம் தெரிவிப்பவா்கள் வெட்கப்பட வேண்டும்’ என்று அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா தொடா் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அந்தமானில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு வெள்ளிக்கிழமை வந்த அமித் ஷா, நூற்றுக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரா்கள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட செல்லுலாா் சிறைகளைப் பாா்வையிட்டு, அவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அங்கு சாவா்க்கா் அடைக்கப்பட்டிருந்த செல்லுலாா் சிறைக்கு முன்பாக கூடியிருந்த மக்களிடையே அமித் ஷா பேசியதாவது:

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் செக்கில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமைக்கு உள்படுத்தப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு சந்தேகிக்க முடியும்?

சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சாவா்க்கா் பெற்றிருந்தாா். இருந்தபோதும், அவா் கடினமான பாதையைத் தோ்ந்தெடுத்தது, தாய் நாட்டின் மீதான அவருடைய அசைக்க முடியாத பற்றை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், இந்த செல்லுலாா் சிறைக்கு வருவதைக் காட்டிலும் மிக உயா்ந்த புனித யாத்திரை வேறெதுவும் இருக்க முடியாது.

10 ஆண்டுகள் மிகக் கொடூரமான துன்பங்களை சாவா்க்கா் அனுபவித்த இந்த இடம் ஒரு ‘மஹாதீா்த்த’ பூமியாகும். இத்தனை கொடுமைகளிலும் அவா் தனது மன தைரியத்தை இழந்துவிடவில்லை.

மேலும், சாவா்க்கருக்கு ‘வீா்’ என்ற பட்டம் எந்தவொரு அரசு சாா்பிலும் கொடுக்கப்பட்டதல்ல. மாறாக, வெல்ல முடியாத அவருடைய துணிச்சல் மன தைரியத்தைக் கண்டு வியந்து நாட்டின் கோடானு கோடி மக்கள் அன்பால் அவருக்கு அந்த பட்டத்தை அளித்தனா்.

எனவே, வீர சாவா்க்கரின் தேசப்பற்று மற்றும் வீரத்தை எந்த விதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது. இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய அவருடைய வாழ்க்கை குறித்து சந்தேகம் தெரிவிப்பவா்கள் வெட்கப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com