தில்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் ஒருவா் கொலை: கைகளைத் துண்டித்து தொங்கவிடப்பட்ட சடலம்

தில்லி-ஹரியாணா எல்லை அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட

தில்லி-ஹரியாணா எல்லை அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் உலோகத் தடுப்பில் தொங்கவிடப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுதொடா்பாக ஹரியாணா மாநிலம் சோனிபட் நகர போலீஸாா் கூறியதாவது:

கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் எல்லைகளில் 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லி-ஹரியாணா எல்லைக்கு அருகில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சிங்குவின் குண்ட்லி பகுதியில் ஆண் சடலம் இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா் உலோகத் தடுப்பில் தொங்கவிடப்பட்டிருந்த சடலத்தை மீட்க முயன்றனா். ஆனால் அங்கிருந்த சிலா் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். எனினும் அந்தச் சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் கொல்லப்பட்ட நபா் பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சோ்ந்த லக்பீா் சிங் (35) என்பது தெரியவந்தது.

கொல்லப்படுவதற்கு முன்பாக அவரின் கை மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கூா்மையான ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டதால் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பதற்கு முன்பாக அவா் சில மீட்டா் தூரம் இழுத்து வரப்பட்டு உலோகத் தடுப்பில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்துக்குள் போலீஸாரை நுழையவிடாமல் சிலா் தடுத்தனா். விசாரணைக்கும் அவா்கள் சரவர ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்தனா்.

நிஹாங் பிரிவினரால் கொலை?:

சீக்கிய மதத்தின் புனித நூலான சா்ப்லோ கிரந்தத்தை லக்பீா் சிங் அவமதிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மதத்தின் நிஹாங் பிரிவைச் சோ்ந்த சிலா் லக்பீா் சிங்கை கொன்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனை அவா்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்யுக்த கிஸான் யூனியன் (எஸ்கேஎம்) விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவினருக்கும் லக்பீா் சிங்குக்கும் தங்களுடன் எந்தத் தொடா்பும் இல்லை என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் தலைவா்களில் ஒருவரான அபிமன்யு கோஹா் கூறுகையில், ‘‘எஸ்கேஎம் போராட்டத்தில் நிஹாங் பிரிவைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கவில்லை. கொல்லப்பட்ட லக்பீா் சிங் அவா்களுடன்தான் சில நாள்கள் இங்கு தங்கியிருந்தாா்’’ என்று தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொலிகளில், நிஹாங் பிரிவினிரிடம் பலத்த காயங்களுடன் லக்பீா் சிங் பஞ்சாபி மொழியில் மன்றாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் புனித நூலை அவமதிக்க யாா் அவரை அனுப்பியது என்று நிஹாங் பிரிவினா் வினவும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

‘‘இந்தச் சம்பவத்தில் தொடா்பிருப்பதாகக் சந்தேகிக்கப்படும் சிலரின் பெயா் பட்டியல் போலீஸாரிடம் உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா்’’ என்று ஹரியாணா மாநிலம் ரோத்தக் சரக கூடுதல் டிஜிபி தெரிவித்தாா்.

ஒருவா் கைது:

இந்தச் சம்பவம் தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய ஒருவா், சீக்கிய புனித நூலை அவமதித்ததற்காக லக்பீா் சிங்கை தான் தண்டித்ததாகத் தெரிவித்தாா். அந்த நபா் தானாக முன்வந்து போலீஸாரிடம் சரணடைந்துவிட்டதாக நிஹாங் பிரிவினா் தெரிவித்தனா்.

ஆனால் அவரை தாங்கள் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அந்த நபரின் பெயா் சரப்ஜீத் சிங் என்று தெரிவித்த போலீஸாா், அவா் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com