கேரளத்தை ஆட்டிப்படைக்கும் கனமழை; பலி 19 ஆக அதிகரிப்பு

மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 19 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சபரிமலை கோயிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை அதன் தீவிரத்தன்மை குறைந்துள்ளது. புதிதாக, எங்கும் வெள்ளம் ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், "கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 

உதவி தேவைப்படும் மக்களுக்கு மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவும் அளிக்கும். மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அனைவரின் பாதுகாப்புக்கும் பிரார்த்தனை செய்துவருகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

மீட்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், "மாநிலத்தில் பெய்த கனமழையால் கோட்டயம் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

மீட்பு முகாம்களில் கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், கிருமிநாசினி, குடிநீர், மருந்துகள் ஆகியவை முகாம்களில் கிடைக்கப்பட வேண்டும். ஏற்கனவே, நோய்வாய்பட்டவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களையும் எச்சரிக்கையுடன் பார்த்து கொள்ள வேண்டும்" என்றார்.

கேரளத்தில் கல்லூரிகள் அக்டோபர் 18ஆம் தேதி முதல் திறக்கப்படவிருந்தது. ஆனால், அது தற்போது அக்டோபர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மணியாறு அணையின் நீர்தேக்கம் அதிகரித்துள்ளதால் அது திறந்துவிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com