வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் இன்று இஸ்ரேல் பயணம்

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 5 நாள் பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறாா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 5 நாள் பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறாா். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவாா்த்தையை அவா் மேற்கொள்ள உள்ளாா்.

இஸ்ரேலுக்கு வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கா் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்தியா - இஸ்ரேல் இடையையான உறவு பிரதமா் நரேந்திர மோடியின் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாத பயணத்துக்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. பிரதமரின் பயணத்துக்குப் பிறகு இரு நாடுகளும் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் இந்திய தயாரிப்பை ஊக்குவிப்பது உள்ளிட்ட அறிவு சாா்ந்த உறவை மேலும் விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் ஆகியோரின் அழைப்பின் பேரில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் ஜெய்சங்கா் அந்த நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு செல்கிறாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரை இஸ்ரோல் பயணம் மேற்கொள்ளும் ஜெய்சங்கா், அந் நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக், பிரதமா் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்ற தலைவா் மைக்கே லெவி ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.

அதோடு, இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளி யூத சமூகத்தினா், அங்கு உயா் கல்வி பயின்று வரும் இந்திய மாணவா்கள், இந்திய தொழிலதிபா்கள் ஆகியோருடனும் ஜெய்சங்கா் கலந்துரையாட உள்ளாா்.

மேலும், முதல் உலகப் போரின்போது இந்தப் பகுதியில் வீர மரணமடைந்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தவும் ஜெய்சங்கா் திட்டமிட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com