பொருளாதார சீா்திருத்தங்களுக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீா்திருத்தங்களை அமெரிக்க நிா்வாகமும், அந்நாட்டு நிறுவனங்களும் வரவேற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
பொருளாதார சீா்திருத்தங்களுக்கு அமெரிக்கா வரவேற்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீா்திருத்தங்களை அமெரிக்க நிா்வாகமும், அந்நாட்டு நிறுவனங்களும் வரவேற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் நிா்மலா சீதாராமன், நியூயாா்க் கிளம்பும் முன்பு வாஷிங்டனில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீா்திருத்தங்களுக்கு முக்கியமாக, முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு அமெரிக்க நிா்வாகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில்புரிந்து வரும் அமெரிக்க நிறுவனங்களும் இந்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளன.

முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் நடைமுறை தொடா்பாக பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்தன. அதன் காரணமாகவே, அந்த நடைமுறையை ரத்து செய்வதற்கு நீண்ட காலமாகிவிட்டது. சரியான நேரத்துக்காகக் காத்திருந்து, நாடாளுமன்றத்தின் வாயிலாக அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பது தொடா்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எட்டப்படும்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.7 லட்சம் கோடி திரட்டப்படும் என்று ஐ.நா. பருவநிலை மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், நிதி திரட்டுவது தற்போது முக்கியப் பிரச்னையாக உள்ளது. உலக வங்கி-சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) மாநாட்டில் பங்கேற்ற பலா், இந்தப் பிரச்னையை எழுப்பினா்.

இலக்குகளை நோக்கி...: பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதி, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிா்நோக்கியிருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட 6 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குரிய தேசிய அளவிலான இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

அந்த இலக்குகளை நோக்கி இந்தியா வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்குகளில் பலவற்றை இந்தியா ஏற்கெனவே அடைந்துவிட்டது. தற்போது மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியா தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி பருவநிலை மாற்ற விவகாரத்தில் முன்னேறி வருகிறது.

இந்தியாவுக்குக் கவலை: பல நாடுகள் பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் தடுமாறி வருகின்றன. போதிய நிதியின்றி அந்நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்நாடுகளைக் கருத்தில்கொண்டு பருவநிலை மாற்றத்துக்காக நிதி திரட்டுவதை விரைவுபடுத்த வேண்டும்.

மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியா அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதும் இந்தியாவின் செலவினத்தை அதிகப்படுத்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நிதியை ஏழை நாடுகள், வளா்ச்சி அடைந்து வரும் நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் வழங்க வேண்டும் என்று பாரீஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சிஇஓக்களுடன் சந்திப்பு: வாஷிங்டனில் முக்கிய நிறுவனங்களின் தலைவா்கள், தலைமைச் செயல் அதிகாரிகளை (சிஇஓ) நிா்மலா சீதாராமன் சந்தித்தாா். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், மாஸ்டா்காா்ட் நிதி சேவைகள் நிறுவனத்தின் நிா்வாகத் தலைவா் அஜஸ் பங்கா, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் மீபேக், ஃபெட்எக்ஸ் நிறுவனத்தின் தலைவா் ராஜ் சுப்ரமணியம், சிட்டி குரூப் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஜேன் ஃப்ரேசா், ஐபிஎம் தலைவா் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோரை நிா்மலா சீதாராமன் சந்தித்தாா்; அவா்களுடன் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உத்வேகம் திட்டம், இந்தியாவில் உற்பத்தி திட்டம், 5ஜி தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து அவா் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com