ஜம்மு - காஷ்மீரில் இரண்டு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்; வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி

இரண்டாவது தாக்குதல் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சூட தொடங்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஹீர் அகமது என்ற தொழிலாளி படுகாயமடைந்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு - காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிகாரைச் சேர்ந்த வியாபாரியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் நேற்று மாலை 6.40 மணியளவில் நடந்த முதல் சம்பவத்தில் 36 வயதான அரவிந்த் குமார் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதில், பலத்த காயமடைந்த அவர் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு, முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் இதே பகுதியில் வீரேந்திர பாஸ்வான் என்ற மற்றொரு வியாபாரி கொல்லப்பட்டது கடும் விமரிசனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இதேபோல, இரண்டாவது தாக்குதல் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சூட தொடங்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சஹீர் அகமது என்ற தொழிலாளி படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் உயிரிழந்தார். 

ஒரே நாளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று புல்வாமா பகுதியில் உள்ள ககாபோரா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். நல்வாய்ப்பாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. 

இப்படி ஒரே நாளில் 3 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருப்பது காஷ்மீரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com