
நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
லக்கிம்பூர் சம்பவத்திற்காக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய இணையமைச்சரவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிவரை இந்த போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.