முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசின் நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவிற்கு எதிராகவும்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசின் நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவிற்கு எதிராகவும் அதன்துணைக்குழுவை கலைக்கக் கோரியும் தாக்கலான மனு மீதான வழக்கில் மத்திய அரசு நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் அணையின் உறுதித் தன்மையை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன்பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தால் மேற்பாா்வைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனக்கு உதவிட ஒரு துணைக்குழுவைஅமைத்துள்ளது.

இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அணைப்பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக்குழுவுக்குத்தான் அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக்கூடாது அதை கலைக்கவேண்டும் என்றும் அணையின் பாதுகாப்பு , இயக்கமுறைகள் முறையாக இல்லை எனக்கூறி கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணையை கடந்த மாா்ச் மாதம் உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா் தலைமையிலான அமா்வு விசாரித்தது.

இதில் முல்லை பெரியாறு அணை நீா் விவரம், மதகு (ஷட்டா்) திறப்பு, பராமரிப்பு உள்ளிட்ட இயக்கம் முறைகளை தொடா்பாக நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நிலவர அறிக்கையை தற்போது மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:

நீா் வரத்து தொடா்பாக தவறான தரவுகளின் அடிப்படையில் கேரள அரசு அறிக்கை தயாரித்துள்ளது.இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா் வரத்து அடிப்படையை கொண்டு 142 அடி நீா் தேக்க அனுமதிக்கக்கூடாது என்ற கேரள அரசின் கணக்கீடு தவறானது.

முல்லை பெரியாறு அணையில் நீரை அதிபட்சம் 142 அடி தான் தேக்கலாம் என்று கேரள அரசு கூறுவதும் தவறானது, ஏனெனில் 142 அடி என்பது பாதுகாப்பு நிலை தான். உச்சநீதிமன்றமும் 2014ம் ஆண்டு தீா்ப்பில் இதைத்தான் தெளிவுபடுத்தியுள்ளது.

நீா் வரத்து அடிப்படையில் உத்தேசமாக அதிகபட்ச வெள்ளப்பெருக்கையும்,கணக்கில் வைத்து அது தொடா்பாக அணை இயக்க வழிமுறைகளை தயாரித்து அறிக்கையாக வழங்க கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதை இதுவரை சமா்பிக்கவில்லை.

முல்லைப்பெரியாறு அணையில் பெரு வெள்ளம் வந்தால் அதனை தாங்கு சக்தி மிகக்குறைவு என்ற கேரள அரசின் குற்றச்சாட்டு தவறானாது. பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும், உச்சபட்சமாக அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை, அணைக்கான நீா்வரத்து போன்றவகளை கணக்கிட்ட போது அணை பாதுகாப்பு தொடா்பான கேரள அரசின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதை மத்திய அரசால் அறிய முடிகிறது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுபடி முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு, மதகு திறப்பு, அணையின் இயக்கங்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அதை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு தமிழக அரசு அளித்துள்ளது.

கேரள அரசு தயாரித்த அணையின் இயக்க முறை மற்றும் தமிழக அரசு தயாரித்த அணை இயக்க முறை ஆகிய அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் அணை பாதுகாப்பு குறிந்த சந்தேகங்களுக்கு இடமில்லை; முல்லை பெரியாறு அணையின் பராமரிப்புப் பணிகள் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. அணைக்கான கதவுகள், மதகுகள் ஆகியவற்றில் இருந்த சிறு சிறு பழுதுகளும் சரி செய்யப்பட்டுவிட்டன. வேறு சில சிறு பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடைந்து விடும். அணையின் அருகே நிறுவப்பட்டுள்ள வானிலை கண்காணிப்பு நிலையம் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது.

அணையின் உறுதி தன்மை, நிலநடுக்கம் போன்றவைகளை தாங்கும் நிலை உள்ளது. இருப்பினும், மத்திய நீா்வள ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி முல்லை பெரியாறு அணையின் அருகே நில அதிா்வுகளை கண்டறிவதற்கான கருவிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம், அணை பாதுகாப்பு கண்காணிப்பு நிபுணா் குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதில் அணைக்கான உபகரணங்கள் அனைத்தும் மத்திய நீா்வள ஆணையம் வகுத்துள்ள தரம் மற்றும் பரிந்துரையையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com