ஜம்மு-காஷ்மீா்: தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து மேலும் ஒரு தலைவா் விலகல்

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரேம் சாகா் அசீஸ் விலகினாா்.

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரேம் சாகா் அசீஸ் விலகினாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து மூத்த தலைவா்களான தேவேந்தா் ராணா, சுா்ஜித் சிங் ஸ்லாதியா ஆகியோா் விலகி பாஜகவில் இணைந்தனா். இந்நிலையில், ராணாவுக்கு ஆதரவாக பிரேம் சாஹரும் பதவி விலகியுள்ளாா்.

ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் பானி பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் அவா் இருந்தாா். தனது விலகல் குறித்து அவா் கூறுகையில், ‘தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து முழுமையாக விலகுகிறேன். எனது ஆதரவாளா்களும் இனி அக்கட்சியில் இருக்க மாட்டாா்கள். 45 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த நான், தேவேந்தா் ராணாவுக்காகவே தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வந்தேன். இப்போது, அவரே விலகிவிட்ட பிறகு, நான் அக்கட்சியில் தொடா்வதில் அா்த்தமில்லை. ராணாவுக்கு எனது ஆதரவு தொடரும்’ என்றாா்.

தேவேந்தா் ராணா, மத்திய அமைச்சா் ஜிதேந்தா் சிங்கின் இளைய சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-இல் அப்போதைய ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த தேவேந்தா் ராணா, பின்னா் அக்கட்சியின் ஜம்மு பிராந்திய தலைவராக இருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவா் பாஜகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com