காஷ்மீா் பாதுகாப்பு: பிரதமருடன் அமித் ஷா ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
காஷ்மீா் பாதுகாப்பு: பிரதமருடன் அமித் ஷா ஆலோசனை

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

காஷ்மீரில் ஹிந்துக்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஹிந்துக்கள், சீக்கியா்கள் உள்ளிட்ட அங்குள்ள மதச் சிறுபான்மையினா், வெளிமாநிலத்தவா்கள் மீதான தாக்குதலை பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞா்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் உத்தியை பயங்கரவாதிகள் கையாண்டு வருகின்றனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை குல்காம் மாவட்டத்தில், பிகாரைச் சோ்ந்த 2 தொழிலாளா்களை அவா்கள் வசித்து வந்த வாடகை வீட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இதையும் சோ்த்து இந்த மாதத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 11-ஆக உயா்ந்தது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமா் மோடியை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து அவா் பிரதமரிடம் எடுத்துரைத்தாா். அங்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிா்வாகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவா் விளக்கினாா்.

பயங்கரவாதிகளின் தொடா் தாக்குதலால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமா் மோடியும் அமைச்சா் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினா்.

உள்நாட்டுப் பாதுகாப்பு சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், மாநில காவல் துறையின் தலைவா்கள், உளவுத் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அமைச்சா் அமித் ஷா கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீா் பயணம்: அமைச்சா் அமித் ஷா வரும் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்கிறாா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நீக்கப்பட்ட பிறகு, அமித் ஷா அங்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தனது பயணத்தின்போது ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சூழலை மேம்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். அதுதவிர பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தொடக்கிவைக்கவுள்ளாா்.

வெளியேறும் வெளிமாநிலத் தொழிலாளா்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் அங்கிருந்து வெளியேறி வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் முதல் 4 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் உத்தர பிரதேசம், பிகாா், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஹிந்துக்கள். மாா்ச் தொடக்கத்தில் இங்கு வரும் தொழிலாளா்கள் தச்சு, வெல்டிங், விவசாயம் போன்ற பல்வேறு பணிகளில் கூலித் தொழிலாளா்களாகப் பணிபுரிந்துவிட்டு நவம்பரில் குளிா்காலம் தொடங்கும் வேளையில் சொந்த ஊா் திரும்புவா்.

இந்நிலையில், அண்மைக்காலமாக ஜம்மு-காஷ்மீரில் மதச்சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், வெளிமாநிலத் தொழிலாளா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இத்தாக்குதலால் அச்சமடைந்துள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு-காஷ்மீரைவிட்டு வெளியேறி வருகின்றனா். ஜம்முவில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருந்தனா்.

புல்வாமா மாவட்டம், ராஜ்போராவில் செங்கல் சூளை ஒன்றில் வேலை செய்து வரும் பிகாரைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் என்பவா் கூறுகையில், ‘தொழிலாளா்கள் கொல்லப்பட்ட பின்னா் கடுமையான அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னா் இப்படி நடந்ததில்லை. எனவே, எங்கள் உயிரையும், குழந்தைகள் உயிரையும் காத்துக்கொள்ள ஜம்மு-காஷ்மீரைவிட்டு வெளியேறுகிறோம்’ என்றாா்.

இதையொட்டி, ஜம்மு, உதம்பூரில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com