கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: பலி எண்ணிக்கை 38-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை "ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.
திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.

கேரளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை "ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழையை குறிக்கும் வகையிலான இந்த ஆரஞ்சு எச்சரிக்கை வியாழக்கிழமை வரையிலும் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு அக். 20-ஆம் தேதி வரையிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அக். 21-ஆம் தேதி கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் பெய்யும் மிக கன மழைக்கான எச்சரிக்கை "சிவப்பு' எச்சரிக்கை என்றும், 6 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழைக்கான எச்சரிக்கை "ஆரஞ்சு' எச்சரிக்கை என்றும், 6 முதல் 11 செ.மீ. மழைக்கான முன்னறிவிப்பு "மஞ்சள்' எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்படுகிறது.
கேரளத்தில் அக். 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினாலும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள 10 முக்கிய அணைகள் நிரம்பி வழியும் நிலையில், பல்வேறு மாவட்டங்களின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடமலையாறு, பம்பை அணைகள் திறப்பு: மாநிலம் முழுவதும் உள்ள 78 அணைகளில் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இடுக்கி, இடமலையாறு, பம்பை, கக்கி ஆகிய பெரிய அணைகள் முழு கொள்ளளவு நீர் நிரம்பியதால் செவ்வாய்க்கிழமை காலை அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பம்பை அணை திறக்கப்பட்டுள்ளதாலும், தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதாலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் யாத்திரையை கேரள அரசு திங்கள்கிழமை ரத்து செய்தது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கேரளத்தில் அக்டோபர் 12 முதல் 18-ஆம் தேதிவரை மழை, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மழையால் சுமார் 90 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 702 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செறுதோணி அணை திறப்பு: செறுதோணி அணையும் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
செறுதோணி அணை திறப்பதற்கு முன்பு, பொதுமக்களை எச்சரிக்கும் விதமாக 3 முறை சைரன் ஒலிக்கப்பட்டதாக கேரள மாநில மின்சார வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆபத்தான இடங்களைவிட்டு வெளியேற மறுப்பவர்கள் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். எங்களது நோக்கம் உயிர்களைக் காப்பாற்றுவதாகும்' என்றார்.
மின்சாரத் துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி, செய்தியாளர்களிடம் கூறுகையில், 2018-ஆம் ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடரில் ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு விதிமுறைகளுக்கேற்ப அணைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
135% கூடுதல் மழைப்பொழிவு: கேரளத்தில் அக்.1 முதல் 19ஆம் தேதி வரையிலும் பெய்த மழையுடன் ஒப்பிடும்போது, 20-ஆம் தேதிக்குப்பின் 135 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் 19 வரையிலும் மாநிலத்தில் மொத்தம் 192.7 மி.மீ. மழை பதிவானது. ஆனால் அதன் பிறகு மொத்தம் 453.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 135 சதவீதம் கூடுதலான மழை பதிவாகும்.
திருச்சூர், ஆலப்புழையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதத்துக்கு மேல் மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 223 சதவீதமும், ஆலப்புழையில் குறைந்தபட்சமாக 66 ததவீதமும் மழைப்பொழிவு காணப்பட்டது.
இதுகுறித்து வானிலை மையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலத்தில் செப்டம்பர் 30 வரையிலும் தென்மேற்குப் பருவமழையில் மழைப்பொழிவு இருந்தது.
இந்நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் லட்சத்தீவு கடற்கரை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளத்தில் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.

இடுக்கி அணை நிரம்பியதையடுத்து, செவ்வாய்க்கிழமை அணை திறக்கப்பட்டு வெளியேறிய நீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com