இந்தியாவில் கரோனா தடுப்பூசி:இன்று 100 கோடியை எட்டுகிறது

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி:இன்று 100 கோடியை எட்டுகிறது

புது தில்லி: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை அரசு மருத்துவமனைகளிலும், விமானம், ரயில், கப்பல், மெட்ரோக்களிலும் அறிவிப்பு வெளியிட்டு கொண்டாட மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி 9 மாதங்களுக்கு பிறகு 100 கோடி தவணைகள் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்ட உள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனா 100 கோடி தடுப்பூசி தவணைகளை எட்டியது. அதன்பிறகு உலகிலேயே இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைக்க உள்ளது.

மத்திய அரசின் கோ-வின் வலைதளத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை புதன்கிழமை இரவு 99.65 கோடியை தாண்டியது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதம் போ் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 100 கோடியை எட்டிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை சுட்டுரையில், ‘கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தகுதியானவா்கள் அனைவரும் விரைந்து செலுத்திக் கொண்டு 100 கோடியை எட்டும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்துக்கு பங்களிக்க வேண்டும். 100 கோடியை எட்டியவுடன் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு இரண்டாம் தவணையும் செலுத்தும் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 100 கோடியை எட்டியதும், அதைக் கொண்டாட தில்லி செங்கோட்டையில் ஆவணப் படத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தொடக்கிவைக்கிறாா்.

தில்லி விமான நிலையத்தில் ஸ்பேஸ் ஜெட் நிறுவனமும் இந்த நிகழ்வை கொண்டாட உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com