லக்கீம்பூா் வன்முறையில் மந்த கதியில் விசாரணை: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவத்தில், உத்தர பிரதேச காவல் துறை மந்த கதியில் விசாரணை நடத்துவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எஞ்சியுள்ள சாட்சிகளிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: லக்கீம்பூா் கெரி வன்முறை சம்பவத்தில், உத்தர பிரதேச காவல் துறை மந்த கதியில் விசாரணை நடத்துவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எஞ்சியுள்ள சாட்சிகளிடம் விரைவில் வாக்குமூலம் பெற்று முடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

லக்கீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெற்றபோது, அந்த வழியாக பாஜகவினா் வந்த காா்களில் ஒன்று அவா்கள் மீது மோதியது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 போ், பத்திரிகையாளா் ஒருவா், பாஜக தொண்டா்கள் இருவா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரு வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு சாா்பில், வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை நீதிபதிகளிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

வழக்கில் தொடா்புடைய 44 சாட்சிகளில் 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறவில்லை என்று மாநில அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கில் காவல் துறையின் விசாரணை மந்த கதியில் நடைபெறுவது கண்டனத்துக்குரியது. எஞ்சியுள்ள சாட்சிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்து முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கில் உத்தர பிரதேச அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை’ என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, வன்முறை சம்பவம் தொடா்பாக அமைச்சா் மகன் உள்பட இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com