அவசர பயன்பாட்டுக்கு கோவேக்ஸின்:மத்திய அமைச்சருடன் உலக சுகாதார அமைப்பின் தலைவா் ஆலோசனை

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ்
டெட்ரோஸ் அதானோம் ~மன்சுக் மாண்டவியா
டெட்ரோஸ் அதானோம் ~மன்சுக் மாண்டவியா

ஜெனீவா: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தொலைபேசியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை கோவேக்ஸ் சேவை மூலம் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் ட்விட்டரில், ‘இந்தியாவில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி திட்டம், கரோனாவை தடுக்க உலகளாவிய ஒப்பந்த தேவை, எண்ம சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்த இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது’ என்று பதிவிட்டாா்.

இந்த ஆலோசனை தொடா்பாக மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், ‘சுகாதாரம், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துதல், உலக சுகாதார அமைப்பின் மறுசீரமைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏராளமான கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வரும் இந்திய அரசுக்கு உலக சகாதார அமைப்பின் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்’ என்று பதிவிட்டாா்.

கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடா்பாக கூடுதல் தரவுகளைக் கோரியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

ஏராளமானோா் கோவேக்ஸின் தடுப்பூசியின் அங்கீகாரத்துக்காக காத்திருப்பது தெரியும் என்றும், அதற்கு முன்பு அந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயன்படக்கூடியது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

முன்னதாக, கோவேக்ஸினின் அவசர பயன்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அக்டோபா் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் கரோனா இரண்டாவது அலை தொடங்கியதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும் கோவேக்ஸ் திட்டத்தை இந்தியா நிறுத்திவைத்தது. இதுவரை 100 நாடுகளுக்கு 6.6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை கோவேக்ஸ் திட்டம் மூலம் இந்தியா வழங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com