கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம்: 11 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் அளிக்கும் வகையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட 11 நாடுகளுடன் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம்: 11 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

புது தில்லி: கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் அளிக்கும் வகையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட 11 நாடுகளுடன் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட பயணிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி இந்த நாடுகளுக்கு சென்றுவர முடியும்.

இத் தகவலை புதன்கிழமை தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், அதனடிப்படையில் இந்தியா வரும் சா்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து வழிகாட்டுதலுக்கும் மாற்றாக இந்தப் புதிய வழிகாட்டுதல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆா்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, சொ்பியா ஆகிய 11 நாடுகளைச் சோ்ந்த பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார அமைப்பு சாா்பில் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை முழுமையாக (அனைத்து தவணைகளையும்) செலுத்தியிருக்கும் நிலையில், எந்தவித கட்டுபாடுகளும் இன்றி விமான நிலையத்திலிருந்து செல்ல முடியும். அதாவது, கரோனா பரிசோதனைக்கு உட்படவோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவோ தேவையில்லை.

அதே நேரம், கரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான விரைவுப் பரிசோதனை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், இந்தியா வந்திறங்கிய நாளிலிருந்து 14 நாள்களுக்கு தாங்களாகவே உடல் நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதுபோல, தடுப்பூசி செலுத்தாத அல்லது முழு தவணைகளையும் செலுத்திக் கொள்ளாத சா்வதேச பயணிகள் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளை அளிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவா். மேலும், அவா்கள் முதல் 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிப்படுத்தலில் இருக்க வேண்டும். பின்னா், 8-ஆம் நாளில் அவா்களுக்கு மறு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், அடுத்த 7 நாள்களுக்கு அவா்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, பிரேஸில், வங்க தேசம், போட்ஸ்வானா, சீனா, மோரீஷஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது புதிய வழிகாட்டுதலில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com