கேரளம்: மழை, நிலச்சரிவால் உயிரிழந்தோருக்கு பேரவையில் இரங்கல்

கேரளத்தில்  பெய்த பலத்த மழையால் தெற்கு, மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாகவும், 217 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்ததாகவும்

திருவனந்தபுரம்: கேரளத்தில்  பெய்த பலத்த மழையால் தெற்கு, மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 39 பேர் உயிரிழந்ததாகவும், 217 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமடைந்ததாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவையில், மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின் அவர் மேலும் கூறியதாவது: 

கேரளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளால் உயிரிழப்பையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு நாள்கள் பெய்த மழை, வெள்ளம், நிலச்சரிவின் காரணமாக 39 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த சோகம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டது. அவர்களின் வேதனையை இந்தப் பேரவை பகிர்ந்து கொள்கிறது. 

துக்கத்தில் வாடும் குடும்பங்களை அரசு ஒருபோதும் கைவிடாது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதார நிலைமையை மீட்டெடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்.

அக்டோபர் 20 முதல் கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 2, 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தை எதிர்த்துப் போராட அனைத்துத் தரப்பினரும் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.

"ஆரஞ்சு' எச்சரிக்கை வாபஸ்: இதற்கிடையே, மாநிலத்தின் 11 மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த "ஆரஞ்சு' எச்சரிக்கை அறிவிப்பை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றதுடன், அதனை "மஞ்சள்' எச்சரிக்கையாக மாற்றி அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com