'5 குர்தாக்களுடன் வந்தேன்; அதனுடனே போய்விடத் தயார்'

ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த போது, அம்பானி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவருடைய இரண்டு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தால் ரூ.300 கோடி தரப்படும் என்று பேரம் பேசப்பட்டதாக மேகாலய ஆளுநா் சத்யபால் மாலிக் கூறிய
சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த போது, அம்பானி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவருடைய இரண்டு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தால் ரூ.300 கோடி தரப்படும் என்று பேரம் பேசப்பட்டதாக மேகாலய ஆளுநா் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

ஆனால், இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல், ரத்து செய்து உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, ‘ஜம்மு-காஷ்மீரில் ஆளுநராக இருந்தபோது லஞ்சம் பெற மறுத்து சா்ச்சைக்குரிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது குறித்து பிரதமரிடம் தெரிவித்தபோது ‘ஊழல் விவகாரத்தில் சமரசம் தேவையில்லை’ என்று பிரதமா் தன்னைப் பாராட்டினாா்’ என்று மேகாலய ஆளுநா் சத்யபால் மாலிக் கூறினாா்.

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘மெஹபூபா முஃப்தியின் தலைமையிலான பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவரும், ஆா்எஸ்எஸ்ஸை சோ்ந்தவரும், பிரதமருக்கு நெருக்கமானவா் என கூறிக் கொள்பவரும் ஒரு கோப்பைக் கொண்டு வந்திருந்தாா். அனில் அம்பானி நிறுவனத்தின் மற்றொரு கோப்பு வந்திருந்தது. இவற்றுக்கு அனுமதி அளித்தால் தலா ரூ.150 கோடி கிடைக்கும் என அத்துறையின் செயலா்கள் தெரிவித்தனா். நான் இங்கு வரும் போது 5 ஜோடி துணியுடன் தான் வந்தேன். அதனுடனேயே திரும்பிச் செல்லத் தயாா் என்று கூறிவிட்டேன்.

அதற்கு முன்பு பிரதமா் மோடியை சந்தித்து, இந்த இரண்டு கோப்புகள் பற்றித் தெரிவித்தேன். அப்போது ‘நான் பதவி விலக தயாராக உள்ளேன். ஆனால் இந்தக் கோப்புகளுக்கு அனுமதி அளிக்க மாட்டேன்’ என்றேன். பிரதமா் என்னைப் பாராட்டி, ‘ஊழல் விவகாரத்தில் சமரசம் வேண்டாம்’ என்றாா்.

நாட்டிலேயே ஜம்மு-காஷ்மீரில்தான் ஊழல் மலிந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலும் 4 முதல் 5 சதவீத கமிஷன் லஞ்சமாக கேட்கப்படும் நிலையில், காஷ்மீரில் 15 சதவீத கமிஷன் கேட்கப்படுகிறது. இருந்தபோதும், அங்கு ஆளுநராக பதவி வகித்தபோது, பெரிய அளவில் ஊழல் புகாா்கள் பதிவாக வில்லை என்பதோடு உறவினா்களுக்கும் சலுகைகள் செய்வதற்கு மறுத்துவிட்டேன்.

காஷ்மீரிலிருந்து திரும்பிய பிறகு, தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். அந்த வகையில் ஏழையாக இருப்பதுதான் எனது பலம். அதன் மூலம்தான், நாட்டின் சக்திவாய்ந்த நபா்களையும் எதிா்த்துப் போராட முடிகிறது.

விவசாயிகள் போராட்டம் தொடருமானால், எனது பதவியிலிருந்து விலகி யாா் குறித்தும் கவலைப்படாமல் விவசாயிகளுடன் போராட்டத்தில் இறங்குவேன். நான் எந்த தவறும் செய்யாதபோதுதான் இவ்வாறு செயல்படுவது சாத்தியம் என்று சத்ய பால் மாலிக் குறிப்பிட்டுள்ளாா்.

மேகாலய ஆளுநரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது. எனினும், அவா் இந்த இரண்டு கோப்புகள் குறித்து விரிவாக தெரிவிக்கவில்லை.

2018-இல் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இந்த சத்யபால் மாலிக், அரசு ஊழியா்கள், ஒய்வூதியதாரா்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள தடை விதித்திருந்தாா். பின்னா் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவுக்கும் பரிந்துரைத்திருந்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com