இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ள பிரதமர் மோடி

வயது வந்தோரில் நான்கில் மூன்று பேர் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணிக்கு உரையாற்றவுள்ளார் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவை தொடர்ந்து இரண்டாவது நாடாக நூறு கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி பேசவுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி இன்று எழுதிய கட்டுரையில், இந்திய தடுப்பூசி திட்டத்தை அச்சத்தில் தொடங்கி தன்னம்பிக்கையில் முடிந்த பயணம் என குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தின் காரணமாக, நாடு வலுப்பெற்றுள்ளது என்றும் அச்சம் அவநம்பிக்கைக்கு மத்தியில் திட்டம் வெற்றிபெற்றதற்கு மக்கள் அதில் வைத்த நம்பிக்கையே காரணம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் திறன் மீது சந்தேகம் எழுப்பிய நிலையிலும் ஒன்பதே மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். வியாழக்கிழமையன்று, 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை படைத்த பின்பு, இந்த சாதனையை சாத்தியமாக்க உதவி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய அறிவியல் துறை, 130 கோடி மக்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் மோடி கூறினார்.

பின்னர் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, "அக்டோபர் 21, 2021 இந்த நாள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 100 கோடி தடுப்பூசி அளவை கடந்திருக்கிறது. 100 ஆண்டுகளில் மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு இப்போது 100 கோடி தடுப்பூசி என்ற வலுவான பாதுகாப்பு கவசத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது" என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com