100 கோடி தடுப்பூசி என்ற சாதனை அனைத்து தனிநபருக்கும் சொந்தமானது: பிரதமர் மோடி

100 கோடி தடுப்பூசி என்ற சாதனை அனைத்து தனிநபருக்கும் சொந்தமானது என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, 100 கோடி தடுப்பூசி என்ற சாதனை அனைத்து தனிநபருக்கும் சொந்தமானது என மோடி பெருமிதம் தெரிவித்தார். 

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அக்டோபர் 21ஆம் தேதியன்று, 1 பில்லியன் கரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா அடைந்தது. இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது. இந்த சாதனைக்காக ஒவ்வொரு குடிமகனையும் வாழ்த்துகிறேன்.

100 கோடி தடுப்பூசிகள் வெறும் எண் அல்ல, நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். இந்தியா ஒரு கடினமான இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்பதற்கான சான்று. நாடு தனது இலக்குகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறது என்பதை இது காட்டுகிறது. 

நம்முடைய தடுப்பூசி திட்டம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். இந்தியாவில் இது எப்படி நல்ல ஒழுங்குமுறையுடன் சாத்தியப்படுத்த முடியும் என கேட்டனர்.

நமது தடுப்பூசி திட்டத்தில் விஐபி கலாசாரம் தலையிடாது என்பதை உறுதி செய்துள்ளோம். அனைவரும் சமமாக நடத்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் முழு தடுப்பூசி திட்டமும் அறிவியல் சார்ந்தது. அறிவியல் அடிப்படையிலானது என்ற உண்மையைப் அறிந்து நாம் பெருமைப்பட வேண்டும். இது முற்றிலும் அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டது. 

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி நேர்மறையாக தெரிவித்துள்ளனர்.
இன்று, இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் முதலீடு வருவது மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. 

நாம் எங்கு பார்த்தாலும் இப்போது நம்பிக்கை மட்டுமே உள்ளது. முன்பு இந்த நாட்டில், முழக்கங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று அனைவரும் 'மேட் இன் இந்தியா' பற்றி பேசுகிறார்கள்" என்றார். 

சீனாவை தொடர்ந்து இரண்டாவது நாடாக நூறு கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது. மோடி இன்று எழுதிய கட்டுரையில், இந்திய தடுப்பூசி திட்டத்தை அச்சத்தில் தொடங்கி தன்னம்பிக்கையில் முடிந்த பயணம் என குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தின் காரணமாக, நாடு வலுப்பெற்றுள்ளது என்றும் அச்சம் அவநம்பிக்கைக்கு மத்தியில் திட்டம் வெற்றிபெற்றதற்கு மக்கள் அதில் வைத்த நம்பிக்கையே காரணம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com