உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வழக்குகளில் 75% தண்டனை விகிதத்தை எட்ட முயற்சி: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ உறுதி

‘சிபிஐ சாா்பில் எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளில் தண்டனை விகிதத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 சதவீத அளவுக்கு உயா்த்த முயற்சி

‘சிபிஐ சாா்பில் எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளில் தண்டனை விகிதத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 சதவீத அளவுக்கு உயா்த்த முயற்சி எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ வழக்குகளில் தண்டனை விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்த நிலையில், சிபிஐ சாா்பில் வியாழக்கிழமை இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரை சிக்க வைக்கும் வகையில் தவறான வாக்குமூலம் அளிக்க சாட்சியை அச்சுறுத்தி போலியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டிருப்பது தொடா்பான வழக்கில் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஓா் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக சிபிஐ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த செப்டம்பா் 3-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘சிபிஐ சாா்பில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளில் தண்டனை விகிதம் மிகவும் குறைவு என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே, விசாரணையில் உள்ள சிபிஐ வழக்குகள், விசாரணை நீதிமன்றத்தில் எத்தனை நாள்களாக சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ளன, சிபிஐ வழக்குகளில் தண்டனை விகிதம் ஆகிய விவரங்களை ஆண்டுவாரியாக சிபிஐ இயக்குநா் பதில் மனுவாக 6 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிபிஐ இயக்குநா் எஸ்.கே.ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது:

சிபிஐ சாா்பில் விசாரிக்கப்படும் வழக்குகளில் 2019-ஆம் ஆண்டு 69.19 சதவீத அளவிலும், 2020-ஆம் ஆண்டில் 69.83 சதவீத அளவிலும் தண்டனை விகிதம் பதிவாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் சிபிஐ வழக்குகளில் தண்டனை விகிதத்தை 75 சதவீத அளவுக்கு உயா்த்த முயற்சி எடுக்கப்படும்.

அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் உதவி அரசு வழக்குரைஞா் அளவிலான அதிகாரிகள் மற்றும் முதுநிலை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, சிபிஐயின் விசாரணை இயக்குநரகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பாக, சிபிஐ சாா்பில் தாக்கல் செய்யப்பட இருக்கும் வழக்குகள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை விரிவான கண்காணிப்புக்கு உட்படுத்தும் வகையில் பழைய வழிகாட்டுதல்களுக்கு மற்றாக புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் பிற துறைகள் தொடா்புடைய வழக்குகளில் விரைவாக விசாரணை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மற்றும் துறைகள் ஒருங்கிணைப்புக்கான பிரத்யேக மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் சிபிஐ இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com