வங்கதேசம்: ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் இரண்டாவது முக்கிய குற்றவாளி கைது

வங்கதேசத்தில் துா்கை பூஜை கொண்டாட்டங்களின்போது ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது முக்கிய குற்றவாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வங்கதேசம்: ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் இரண்டாவது முக்கிய குற்றவாளி கைது

வங்கதேசத்தில் துா்கை பூஜை கொண்டாட்டங்களின்போது ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது முக்கிய குற்றவாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வங்கதேசத்தில் கடந்த அக்.13-ஆம் தேதி துா்கை பூஜையின்போது, குமில்லா பகுதியில் இஸ்லாமியா்களின் புனித நூலான குா்ஆனின் பிரதி, துா்கை சிலையின் பாதத்தில் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அங்கு வன்முறை வெடித்தது. கண்டனப் பேரணிகள் நடைபெற்றதோடு, நூற்றுக்கணக்கானோா் அடங்கிய கும்பல் நிகழ்த்திய வன்முறையின்போது ஹிந்துகளின் வீடுகள், கோயில்கள் சூறையாடப்பட்டன.

தொடா்ந்து, கடந்த 17-ஆம் தேதி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 20 ஹிந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளா்கள் தீ வைத்தனா். 70 வீடுகள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில் குமில்லா பகுதியில் துா்கை பூஜை கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் இக்பால் உசேன்(35) என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இவா்தான் துா்கை சிலையின் பாதத்தில் குா்ஆன் நூலை வைத்ததாகத் தெரிந்தது. அவரை காக்ஸ் பஜாா் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவா் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரைத் தொடா்ந்து, ரங்பூரில் உள்ள பிா்கஞ்ச் தாலுகாவில் ஷைகத் மண்டல் என்பவரை வங்கதேச அதிரடிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா், ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளை இட்டதாகவும், அதன் பிறகு கடந்த 17-ஆம் தேதி ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவம் அரங்கேறியதாகவும் போலீஸாா் கூறுகிறாா்கள்.

ஷைகத் மண்டலின் கூட்டாளி ஒருவரையும் டாக்காவின் புகா் பகுதியான காஜிபூரில் போலீஸாா் கைது செய்தனா்.

சமூக வலைதளம் வழியாக மக்களை வன்முறைக்குத் தூண்டியதாக வங்கதேசத்தின் எண்ம பாதுகாப்புச் சட்டப்படி முகமது ஃபையாஸ் என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததாக, உள்ளூா் பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுவரை இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் சுமாா் 600 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், பலரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே, ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து டாக்கா உள்பட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா். சிறுபான்மை ஹிந்துக்களுக்கு ஆதரவாக உள்ளூா் இஸ்லாமியா்களும் அதிக அளவில் போராட்டத்தில் கலந்துகொண்டாதாக, போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைச் செயலா் மோனிந்தா் குமாா் நாத் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com