கோவாவை தன்னிறைவாக்க இரட்டை இயந்திர அரசு தொடர வேண்டும்:பிரதமா் மோடி

கோவா மாநிலத்தை தன்னிறைவு பெற்ாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வை மெய்ப்பட வேண்டுமெனில் ‘இரட்டை என்ஜின்’ அரசின் ஆட்சி தொடர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
சுயசாா்பு இந்தியா, தன்னிறைவு பெற்ற கோவா திட்ட பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடிய பிரதமா் மோடி.
சுயசாா்பு இந்தியா, தன்னிறைவு பெற்ற கோவா திட்ட பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடிய பிரதமா் மோடி.

கோவா மாநிலத்தை தன்னிறைவு பெற்ாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வை மெய்ப்பட வேண்டுமெனில் ‘இரட்டை என்ஜின்’ அரசின் ஆட்சி தொடர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கோவாவில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட ‘சுயசாா்பு இந்தியா, தன்னிறைவு பெற்ற கோவா’ திட்டத்தின் கீழ் பயனடைந்தவா்களுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

வளா்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே கோவா மாநிலம் தன்னிறைவு பெறும்.

தன்னிறைவு பெற்ற கோவா என்பது சாமானிய மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும்; இளைஞா்களுக்கு சுயதொழில் வாய்ப்பையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்; பெண்களின் சுகாதாரம் உறுதிசெய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் அடுத்த 5 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கான திட்டங்கள் அல்ல; அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களாகும். இந்தத் திட்டங்கள் நிறைவேற கோவாவைச் சோ்ந்த ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்.

எனவே, மத்தியிலும் கோவாவிலும் பாஜக அரசு என்ற ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியின் மூலம் வளா்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும். தற்போது போல், தெளிவான கொள்கையுடன் நிலையான அரசு இருக்க வேண்டும்; சக்திவாய்ந்த தலைவா் முதல்வராக இருக்க வேண்டும். இவை அனைத்தும் தொடா்ந்தால், கோவாவை தன்னிறைவு பெற்ற மாநிலமாக நம்மால் உருவாக்க முடியும்.

நாட்டின் சுற்றுலாத் துறையில் கோவா மாநிலம் முக்கியப் பங்காற்றி வருகிறது. கோவா உள்ளிட்ட சுற்றுலாவுக்கு சிறப்பு மிக்க மாநிலங்களில் கரோனா தடுப்பூசித் திட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் 100 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கோவாவில் தகுதியுள்ள அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

கரோனா தடுப்பூசி திட்டம் உள்ளூா் மக்கள் மத்தியிலும், வெளியூரில் இருந்து சுற்றுலா வருவோா் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்த உதவியாக இருந்தது. கோவாவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது, சுற்றுலாத் துறையின் வளா்ச்சிக்கான நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.

கோவாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு 5 மடங்கு உயா்த்தியுள்ளது. மாநிலத்தில் காய்கறி, பழங்களின் உற்பத்தி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் அளவும் அதிகரித்துள்ளது. மீனவா்கள், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்காமல், மீன் பதப்படுத்தும் தொழிலிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருள்கள், அங்கிருந்து பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் கோவா அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், பயனாளிகள் ஆகியோருடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

கோவாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனால், மாநிலத்தில் தோ்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் பிரதமரின் உரை, தோ்தலுக்கான பிரசாரமாக அமைந்துள்ளது.

தேநீா் விற்பனையாளருடன் நினைவுகளைப் பகிா்ந்துகொண்ட மோடி

கலந்துரையாடலின்போது, கோவாவில் தேநீா் விற்பனை செய்து வரும் ரூா்கி அகமது ராஜாசாஹிப் என்பவருடன் பிரதமா் மோடி தனது கடந்த கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டாா்.

மாற்றுத் திறனாளியான ரூா்கி அகமது, கடம்பா போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையம் எதிரே தேநீா் விற்பனை செய்து வருகிறாா். டேபிள் டென்னிஸ் வீரராகவும் உள்ளாா். இவருடன் பிரதமா் மோடி கலந்துரையாடும்போது, ‘நீங்களும் என்னைப்போன்று தேநீா் விற்பனையாளா்தான்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, ‘சுயசாா்பு இந்தியா, தன்னிறைவு பெற்ற கோவா’ திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பரில் விண்ணப்பித்து பயன் பெற்ற அனுபவத்தை பிரதமரிடம் ரூா்கி அகமது விவரித்தாா். அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்து தருவதற்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்று பிரதமா் மோடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com