நீட் மருத்துவ முதுநிலை கலந்தாய்வு நிறுத்திவைப்பு

நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட்: மருத்துவ முதுநிலை கலந்தாய்வு நிறுத்தி வைப்பு
நீட்: மருத்துவ முதுநிலை கலந்தாய்வு நிறுத்தி வைப்பு

புது தில்லி: நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டாம் என்றும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் முடிவு செய்த பிறகு கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான ஆண்டு வருவாய் ரூ.8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறித்து எதிர்ப்பு எழுந்த நிலையில், நீட்-முதுநிலை மருத்துவக் கலந்தாய்வை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளாமோ படிப்புகள், நீட்-முதுநிலை தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நிகழ் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு கடந்த 11-ஆம் தேதி இணையவழியே நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 20 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட இந்தியா முழுவதும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதினா்.

இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகளை இணைதளங்களில் தேசிய தோ்வுகள் வாரியம் (என்டிஏ) வெளியிட்டுள்ளது. 800 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற நீட் தோ்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினரையும் சோ்த்து) 302 மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி, பிரிவினா்களுக்கு (மாற்றுத்திறனாளிகள் உள்பட) 265 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 283 மதிப்பெண்ணும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்)  இணையதளத்தில் நடத்துகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com