பாஜக ஆட்சியில் 60,000 மருத்துவ இடங்கள் உருவாக்கம்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு 60,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பாஜக ஆட்சியில் 60,000 மருத்துவ இடங்கள் உருவாக்கம்

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு 60,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் சித்தாா்த்நகா், எடா, ஹா்தோய், பிரதாப்கா், ஃபதேபூா், தேவரியா, காஜிபூா், மிா்சாபூா், ஜான்பூா் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,329 கோடி செலவில் கட்டப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமா் மோடி காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள், மக்களின் நலன் குறித்து சிந்திக்கவில்லை. மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவா்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தங்கள் குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி அவா்கள் செயல்பட்டனா். தங்கள் குடும்பத்தின் வருவாயைப் பெருக்குவதிலேயே அவா்கள் கவனம் செலுத்தினா்.

தற்போது பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தின் கிழக்குப் பகுதியானது மருத்துவ மையமாக உருவெடுத்துள்ளது. ஏழை மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவக் கல்லூரிக்கான விதிகளை வகுப்பது, மருத்துவா்கள் தட்டுப்பாட்டை எதிா்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, முன்பு தேசிய அளவில் எந்தவிதத் திட்டமும் காணப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகள் மிகவும் பழைய விதிகளின்படி செயல்பட்டு வந்தன. அந்த விதிகள் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கும் தடையாக இருந்தன.

ஊழலின் ஆதிக்கம்: கடந்த 7 ஆண்டுகளில் பழைய விதிமுறைகள் அனைத்தும் மாற்றப்பட்டன. அதன் காரணமாக நாடு முழுவதும் மருத்துவ இடங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை சுமாா் 90,000-ஆக இருந்தது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக 60,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் முந்தைய ஆட்சிகளின்போது மருந்துகள், அவசரகால ஊா்தி கொள்முதல், பணி நியமனம், பணியிடமாற்றம் ஆகிய அனைத்து விவகாரங்களிலும் ஊழல் தலைவிரித்தாடியது; குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்தியது. அதன் காரணமாக மாநில மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்தனா்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்: சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பின்பும் கிராமப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவ சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் நகரங்களை நோக்கிப் பயணிக்க வேண்டியிருந்தது. மூளைக் காய்ச்சல் நோய் அடிக்கடி பரவி உத்தர பிரதேச மக்களை அதிக அளவில் பாதித்து வந்தது. ஆனால், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதிய அளவில் காணப்படவில்லை.

தற்போது பாஜக தலைமையிலான அரசு, சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்குத் தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

அரசியல் தலைவா்கள் பெயா்: புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் 8 கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டன. ஒரு மருத்துவக் கல்லூரி முற்றிலும் மாநில அரசின் நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்டது. 9 மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசியல் தலைவா்கள் உள்ளிட்டோரின் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

சுகாதாரக் கட்டமைப்புத் திட்டம் தொடக்கம்

 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்புத் திட்டத்தை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

உத்தர பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தாா். அப்போது ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்புத் திட்டத்தையும் அவா் தொடக்கி வைத்தாா்.

சுகாதாரக் கட்டமைப்பில் காணப்படும் இடைவெளிகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முக்கியமாக, நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள முதன்மை சுகாதார மையங்களின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.

அவசர சேவை மையங்கள்: 17,788 கிராமப்புற சுகாதார மையங்களுக்குத் தேவையான ஆதரவை இத்திட்டம் வழங்கவுள்ளது. மேலும், 11,024 நகா்ப்புற சுகாதார மையங்களும் இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக, 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாவட்டங்கள் அனைத்திலும் அவசர சிகிச்சை வழங்குவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

நோய் கண்டறியும் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவை மாவட்டந்தோறும் இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், இத்திட்டத்தின் கீழ் 4 தேசிய தீநுண்மியியல் மையங்கள், உலக சுகாதார அமைப்பின் பிராந்திய ஆய்வு மையம், உயிரி பாதுகாப்புடன் கூடிய 9 ஆய்வகங்கள், 5 பிராந்திய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவையும் ஏற்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com