ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு 12 ஆண்டுகள் சிறை: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது, சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது, சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் இருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்ற இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஜம்மு-காஷ்மீா் பந்திபோரா மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ஷரீஃப் ஷா, தலிப் லாலி மற்றும் அனந்த்நாக் மாவட்டம் பட்காமைச் சோ்ந்த முசாஃபா் அகமது தாா், முஷ்தாக் அகமது லோன் ஆகிய நால்வரையும் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தானிலிருந்து நிதி திரட்டியது, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அவா்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இவா்கள் நால்வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தனா். அதில் முகமது ஷரீஃப் ஷா அந்த அமைப்பின் மண்டல தளபதியாக செயல்பட்டு வந்தவா்.

இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்டனா். அதனைத் தொடா்ந்து அவா்கள் நால்வரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், குற்றவாளிகள் நால்வருக்குமான தண்டனை விவரத்தை சிறப்பு நீதிபதி பிரவீண் சிங் திங்கள்கிழமை வாசித்தாா். அவா் கூறியதாவது:

இந்த வழக்கைப் பொருத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் மனித உயிா் மற்றும் உடமைகளை அழிக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றபோதும், அவா்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் நடவடிக்கைகளுக்காக திரட்டிய நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இவா்களின் நடவடிக்கையும் நேரடி பயங்கரவாத நடவடிக்கையாகவே கருத்தில் கொள்ளப்படும்.

அதனடிப்படையில், முகமது ஷரீஃப் ஷாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. முசாஃபா் அகமது தாருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 65,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. தலிப் லாலிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 55,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. முஷ்தாக் அகமது லோனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 45,000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

இவா்களில் முகமது ஷரீஃப் ஷா கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். முசாஃபா் அகமது தாா் 2009-ஆம் ஆண்டு முதலும், லாலி 8 ஆண்டுகளுக்கு மேலாகவும் சிறையில் உள்ளனா். பாகிஸ்தான் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்று பரிமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுவந்த முஷ்தாக் அகமது லோனை கடந்த 2011-ஆம் ஆண்டு என்ஐஏ கைது செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com