பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு: தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அரசுப் பணிகளில் பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.
பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு: தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அரசுப் பணிகளில் பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.

அரசுப் பணி பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மாநில அரசுகள் வழக்கு தொடா்ந்துள்ளன. இந்த வழக்குகளை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையில், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘எஸ்சி, எஸ்டி பிரிவினா் தேசிய நீரோட்டத்திலிருந்து பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளனா். நாட்டு நலன் கருதி அவா்களுக்கு சம வாய்ப்பு வழங்க ஒரு சமநிலையை (இட ஒதுக்கீடு வடிவத்தில்) கொண்டுவர வேண்டும். எனவே, அரசுப் பணி பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தும் வகையில் திட்டவட்டமான, தீா்க்கமான வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் வழக்குகள்தான் இருக்கும். இடஒதுக்கீடு எந்தக் கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற பிரச்னைக்கும் முடிவு கிடைக்காது’ என்றாா்.

இந்த வழக்குகளில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பல்பீா் சிங் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்களின் தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனா். பின்னா், தீா்ப்பை ஒத்திவைத்து அறிவித்தனா்.

முன்னதாக, இந்த வழக்குகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘75 ஆண்டுகள் ஆகியும் முன்னேறிய பிரிவினருக்கு இணையாக எஸ்சி, எஸ்டி பிரிவினரை முன்னேற்ற முடியவில்லை. அரசுப் பணி குரூப் ‘ஏ’ பிரிவில் எஸ்சி, எஸ்டி பிரிவினா் உயா் பதவியைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காக சில உறுதியான அடிப்படையை உச்சநீதிமன்றம் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ எனத் தெரிவித்திருந்தது.

‘எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமது முந்தைய முடிவுகளுக்குள் மீண்டும் செல்ல மாட்டோம்; அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை மாநில அரசுகள்தாம் முடிவு செய்ய வேண்டும்’ என உச்சநீதிமன்ற அமா்வும் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com