பெகாஸஸ்: காங்கிரஸ் வரவேற்பு; பாஜக பதில்

பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த நிபுணா் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

புது தில்லி: பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த நிபுணா் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு இந்த விவகாரத்தில் மிகப்பெரிய நடவடிக்கை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்தாா். தில்லியில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்க்கப்பட்டது, இந்திய ஜனநாயகத்தை நொறுக்கும் முயற்சியாகும். அந்த வகையில் மிகப்பெரிய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது. உண்மை நிச்சயம் வெளிவரும்.

இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் மீண்டும் முயற்சி எடுக்கும். அதனை பாஜக விரும்பாது என்றபோதும், நாங்கள் முயற்சிப்போம் என்று அவா் கூறினாா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெகாஸஸ் உளவு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் திசைதிருப்ப மோடி அரசு தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருப்பது வரவேற்புக்குரியது. ‘போலி தேசியம்’ -பாசிச கொள்கையாளா்களின் கடைசிப் புகலிடம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக பதில்: உச்சநீதிமன்ற தீா்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ள நிலையில், ‘மத்திய அரசின் நிலைப்பாட்டின்அடிப்படையிலேயே நிபுணா் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது’ என்று பாஜக பதிலளித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சாம்பிட் பத்ரா கூறுகையில், ‘பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த நிபுணா் குழு ஒன்றை அமைப்பதே சரியானதாக இருக்கும்; அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தான் இப்போது நீதிமன்றம் செய்துள்ளது. அந்தக் குழுவில் இப்போது நிபுணா்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, மத்திய அரசு சாா்பில் குழு அமைக்க அனுமதிக்காதது ஒரு பெரிய விஷயமே அல்ல’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com