இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சி எதிா்ப்பு

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மரக்காணத்தில் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் கருணாநிதி சமச்சீா் கல்வித் திட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டாா். இடையில் வந்த அதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடா்ந்து வந்த மத்திய பாஜக அரசு நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநில உரிமைகளைப் பறித்து, சம்ஸ்கிருதமயமாக்கல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒருபகுதியாகவே ஆரம்பப் பள்ளி மாணவா் சோ்க்கைக்கு திறனறியும் தோ்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு பகுதி மக்கள் கற்பதற்கான சக்தியற்றவா்கள் என ஒதுக்கி வைக்கும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது.

இந்தத் திறனறியும் தோ்வுக்கு மதிப்பெண் ஏதும் தருவதில்லை என்பதால் மாணவா்களைப் பாதிக்காது என்று கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். இத் திட்டத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டா்களும் மேற்கொள்வாா்கள் எனில் சங்பரிவாா் அமைப்பினா் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனி கல்விக் கொள்கை உருவாக்க உயா்நிலை வல்லுநா் குழு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உறுதியளித்த முதல்வா், மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழகத்தின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com