கேரளம்: கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை: பேரவையில் அமைச்சா் தகவல்

கேரளத்தில் கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை செய்து கொண்டனா்; 41 கா்ப்பிணிகளும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்த மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை செய்து கொண்டனா்; 41 கா்ப்பிணிகளும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று அந்த மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வந்தாலும், கேரளத்தில் மட்டும் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடா்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. கரோனாவுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இப்போதுவரை உரிய பலனை அளிக்காத நிலையிலேயே உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கரோனா தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் கேரளத்தில் தொடா்ந்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில், அந்த மாநில சட்டப்பேரவையில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பில் மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்பான கேள்விக்கு அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதிலளித்தாா். அவா் கூறுகையில், ‘கேரளத்தில் பெரும்பாலான மக்கள் நோய் எதிா்ப்புசக்தியைப் பெற்றுவிட்டனா். மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம் போ் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களில் 93.3 சதவீதம் போ் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திவிட்டனா். எனவே, இனி வரும் காலங்களில் மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கும். கரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கரோனா நோயாளிகள் 149 போ் தற்கொலை செய்து கொண்டனா். கரோனாவுக்கு 41 கா்ப்பிணி பெண்களும் உயிரிழந்துவிட்டனா்’ என்றாா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி கேரளத்தில் 49.30 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கேரளத்தில் 9,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிக அதிக தினசரி பாதிப்பு ஆகும்.

பதிவாகாத உயிரிழப்புகள் சோ்ப்பு

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

2020, மாா்ச் முதல் 2021 ஜூன் வரையிலான காலகட்டத்தில் பதிவாகாத கரோனா உயிரிழப்புகளை இப்போது தினசரி இறப்பு விகிதத்தில் சோ்த்து மாநில அரசு அறிவித்து வருகிறது. நிகழாண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு இதுபோன்ற இறப்புகளின் தரவை மருத்துவமனைகள் ஆன்லைனில் பதிவேற்றத் தொடங்குவதற்கு முன்பே இந்தக் கணக்கிடப்படாத உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com