தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி தலைவராக கே.வி.காமத் நியமனம்

தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவராக பிரபல வங்கித் துறை நிபுணர் கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி தலைவராக கே.வி.காமத் நியமனம்


புது தில்லி: தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் முதல் தலைவராக பிரபல வங்கித் துறை நிபுணர் கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்கான ரூ.20,000 கோடியில் பிரத்யேகமாக இந்த வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் கே.வி.காமத், நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை பல ஆண்டுகாலம் நிர்வகித்தவர். அவரது நிர்வாகத்தின் கீழ்தான் அந்த வங்கி பெரிய அளவில் வளர்ந்தது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் காமத் பணியாற்றியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா-2021 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நீண்டகால நிதியை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு நீண்டகால நிதியைத் திரட்டுவதில் பல சிக்கல்கள் நிலவுவதால், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக இந்த  வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்த வங்கியின் வரவு-செலவு கணக்கு விவரங்கள், ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். அக்கணக்குகளை நாடாளுமன்றம் ஆய்வு செய்ய முடியும். நாடாளுமன்றம் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த தேசிய வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

சாலைகள், பாலங்கள் கட்டுமானத்துக்கு மட்டுமல்லாமல் பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டுமானத்துக்கும் தேசிய வங்கி நிதி வழங்கும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தேசிய வங்கி செயல்படும் என்று மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவெ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com