திரிபுராவில் தொடரும் வன்முறை; மசூதிக்கு தீ வைத்தனரா விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்?

பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் இருக்க தர்மநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் பேரணி
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரின் பேரணி

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராகத் திரிபுராவின் தர்மநகர் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் (VHP) சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த மசூதி ஒன்று, அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. பிற பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பரவாமல் இருக்க தர்மநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சாம்திலா பகுதியில் ஒரு மசூதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. 

அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் திரிபுரா மாநில ரைபிள்ஸ் (டிஎஸ்ஆர்) வீரர்களுடன் மத்திய துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பானுபதா சக்ரவர்த்தி கூறுகையில், “இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. நேற்றிரவு, சமூகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் சில சமூக விரோதிகள் ஊடுருவினர். அவர்கள் தான் சாம்ட்டில்லா மசூதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் திரிபுராவின் அமைதியான  சூழ்நிலையைச் சீர்குலைக்க சில சுயநலவாதிகள் முயல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசவிரோதிகள் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளையும் வதந்திகளைப் பரப்புவதாகவும் இந்த விடியோக்களுக்கும் திரிபுராவல் இப்போது நடந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் திரிபாதி தெரிவித்தார். 

முன்னதாக, வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை துர்கா சிலையின் கால் அடியல் வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.

இதையடுத்து கொமிலா பகுதியில் வைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக, நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பல்வேறு பகுதிகளில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com